பேச்சு சுதந்திரத்தை ஆதரிப்பதாகவும், இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட இரண்டு மாணவ ஆர்வளர்களை விடுவிக்க, காவல்துறையுடன் தனது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் தெரிவித்துள்ளார்.
மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத் (யூ.ஐ.ஏ.எம்.) தலைவராக, கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் நியமிக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, புத்ராஜெயாவில் குந்தியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அஷிக் அலி சேட்டி அலிவி மற்றும் சித்தி நுரிஷா டஷாலி இருவரும் இன்று அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அம்மாணவர் குழு, கல்வி அமைச்சு வளாகத்திலிருந்து பிற அமைச்சர்கள் பயன்படுத்தும் முக்கிய நுழைவாயிலுக்குச் சென்ற பின்னரே கைது செய்யப்பட்டனர் என்று இன்று ஓர் அறிக்கையில் மஸ்லி தெரிவித்துள்ளார்.
“அவர்களில் பெரும்பான்மையானவர்கள் கலைந்து செல்ல உடன்பட்ட போதும், இவர்கள் இருவர் மட்டும் மறுத்ததாகத் தெரிகிறது, ஆக அவர்கள் இருவரும் அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
“அவர்களின் நலனில் அக்கறை கொண்டதனாலும் மனிதாபிமான அடிப்படையிலும் என் அதிகாரிகள் காலை 7 மணிவரை காவல்துறையினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இறுதியில், காலையில் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்,” என்றார் அவர்.
அவரது அமைச்சக கட்டிடத்தில் குந்தியிருப்புப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது, அம்மாணவர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட, நல்ல சேவைகள் வழங்கப்பட்டது எனவும் மஸ்லி தெரிவித்தார்.

இதற்கிடையே, யூ.ஐ.ஏ.எம். முன்னாள் விரிவுரையாளரான மஸ்லி, தனது நியமனம் குறித்து பிரதமர் மகாதிர் மற்றும் பஹாங் சுல்தான் ஹாஜி அஹமத் ஷா ஆகியோரின் ஆலோசனையைப் பெற இருப்பதாக நேற்று தெரிவித்தார்.
தற்போது, சரவாக்கில் இருப்பதால் எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்களை உடனடியாக சந்திக்க முடியாமல் போனது என்றும் மஸ்லி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
“(ஆனால்) அவர்களது கருத்தைக் கேட்பதற்கு, சீக்கிரமே ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களை உறுதியாக நான் சந்திப்பேன்.
“அவர்களைச் சந்திக்க எதிர்வரும் புதன்கிழமை பொருத்தமான நேரத்தை ஏற்பாடு செய்யும்படி என் அதிகாரிகளை நான் கேட்டுள்ளேன்,” என்றும் அவர் கூறினார்.

























