முகைதின்: அன்வாருக்கும் மகாதிருக்குமிடையில் பதவிப் போராட்டமில்லை

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பிகேஆர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிமிடம் பதவியை ஒப்படைக்கும்போது பக்கத்தான் ஹரப்பான் இப்போதுள்ளதைவிட இன்னும் வலுவான நிலையில் இருக்க வேண்டும்.

பதவியை மாற்றிவிடுவது சரியான நேரத்தில் ஒழுங்குடன் நடந்தேற வேண்டும் என்கிறார் பெர்சத்து தலைவர் முகைதின் யாசின்.

அன்வார் எப்போதும் மகாதிரை மதிப்பவர். அவ்விரு ஹரப்பான் தலைவர்களுக்கிடையில் பதவிப் போராட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றாரவர்.

“துன்(மகாதிர்)னுக்குப் பிறகு அன்வார் எட்டாவது பிரதமராவதன் மீது ஹரப்பான் தலைவர்களுக்கிடையில் வாதப் பிரதிவாதங்கள் எதுவும் கிடையாது, ஏனென்றால் அது முடிவான விவகாரம். ‘எப்போது’ என்ற ஒரே ஒரு கேள்வி மட்டுமே உண்டு”, என்று முகைதின் கூறினார்.

“துன் அரசாங்கத்தை அமைக்கவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் கொள்கைகளை அறிமுகப்படுத்தவும் போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்று அன்வாரே கூறியிருக்கிறார்”, என்றாரவர். முகைதின் நேற்று மலேசியாகினிக்குச் சிறப்பு நேர்காணல் ஒன்றை வழங்கினார்.