இந்தியர்களுக்கென ஒரு புதுக் கட்சி மலேசிய முன்னேற்றக் கட்சி

இந்தியர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் Malaysia Advancement Party(எம்ஏபி) எனப்படும் மலேசிய முன்னேற்றக் கட்சி என அதன் இடைக்காலத் தலைவர் செனட்டர் பி.வேதமூர்த்தி கூறினார்.

பக்கத்தானில் பல்லினக் கட்சிகள் பல இருந்தாலும் இந்திய சமூகம் தனது பிரதிநிதியாகவும் தனது நலன்களுக்காக போராடவும் ஒரு கட்சி தேவை என்று எண்ணுவதாக அவர் சொன்னார்.

“ஹிண்ட்ராப் 2005-இலிருந்து இந்திய சமூகத்துக்காக, குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோருக்காக போராடி வந்துள்ளது. இந்திய சமூகம் நாங்கள் (ஹிண்ட்ராப்) அதன் பிரதிநிதியாக இருப்பதை விரும்பியது. அதற்காக ஒரு அரசியல் கட்சியை அமைப்பது அவசியமாயிற்று.

“பெர்சத்து மலாய் சமூகத்தைப் பிரதிநிதிப்பதாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது…..அமனாவும் ஒரு இஸ்லாமியக் கட்சிதான். இஸ்லாத்துக்காக போராட மற்ற கட்சிகளும் உள்ளன. எனவேதான் இந்திய சமூகம் அதன் பிரதிநிதியாக ஒரு கட்சி தேவை என்று விரும்பியது”, என வேதமூர்த்தி நேற்றிரவு ஜோகூரில் , ஜோகூர் இந்திய சமூகத்தைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் கூறினார்.

எம்ஏபி-யை ஹரப்பான் கட்சிகள் ஏற்றுக்கொண்டுவிட்டனவா என்பது பற்றி இப்போது எதுவும் கூற இயலாது என்றாரவர்.

இப்போதுதான் கட்சியைச் சங்கப் பதிவ(ஆர்ஓஎஸ்)கத்தில் பதிவு செய்ய மனுச் செய்யப்பட்டுள்ளது.

ஆர்ஓஎஸ் அங்கீகாரம் கிடைத்ததும் மலேசிய முன்னேற்றக் கட்சியை ஓர் உறுப்புக் கட்சியாக ஏற்றுக்கொள்ளும்படி ஹரப்பானிடம் விண்ணப்பிக்கப்படும் என்றார்.