ரபிசி: அன்வார் குடும்பத்தினர் தேர்தல் நிதிக்காக வீட்டையே அடகு வைத்தார்கள்

பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரபிசி ரம்லி, அவரை எதிர்த்துப் போட்டியிடும் அஸ்மின் அலி 14வது பொதுத் தேர்தலின்போது கட்சியின் தேர்தல் நிதிக்குப் பணம் திரட்டிக்கொடுக்கத் தவறிவிட்டார் எனக் குற்றஞ்சாட்டினார்.

நேற்றிரவு குவாந்தானில் தனது பரப்புரையை மேற்கொண்டிருந்த ரபிசி, அஸ்மினின் பெயரைக் குறிப்பிடாமலேயே, அவர் நினைத்திருந்தால் சிலாங்கூர் மந்திரி புசார் என்ற முறையில் கட்சிக்கு நிதி சேர்க்க உதவியிருக்க முடியும். ஆனால், செய்ய வில்லை என்றார்.

“ஒரு மந்திரி புசார் இருந்தார், எக்ஸ்கோ-கள் இருந்தனர். வலிமை வாய்ந்தவர்களாக இருந்தோம். நாங்கள் செய்ததுபோல் கட்சிக்கு நிதி திரட்ட அவரும் உதவி இருக்கலாம். ரிம20, ரிம30க்கும் டி- சட்டைகள் விற்று கட்சிக்குப் பணம் திரட்டினோம்.

“ஆனால், (அஸ்மின் முகாமிலிருந்து) பணம் வரவே இல்லை. (வேட்பு மனுவுக்கு) இரண்டு வாரங்கள் இருந்த வேளையில் அன்வாரிடம் கவலைப்படாதீர்கள், வைப்புத் தொகைக்காகவும் தேர்தல் பரப்புரைக்காகவும் எங்களால் ஓரளவு பணம் திரட்ட முடியும். மிச்சத்தைக் கட்சிதான் கொடுக்க வேண்டும் என்று கூறினேன்.

“அன்வார் என்ன செய்தார் தெரியுமா? அன்வாரும் கா வானும்( அசிசா வான் இஸ்மாயில்) புக்கிட் செகாம்புட்டில் உள்ள வீட்டை ரிம4 மில்லியனுக்கு அடகு வைத்தார்கள். கடனை இன்னும் கட்டி முடிக்கவில்லை.

“தேர்தலில் வென்றோம். அன்வார் ரிம4 மில்லியனுக்கு வீட்டை அடகு வைத்து வேட்பாளர்களின் வைப்புத்தொகைக்குப் பணம் கொடுத்ததால் நாம் மிகப் பெரிய கட்சியானோம்”, என ரபிசி கூறினார்.

இதில் வருத்தமடையச் செய்யும் விசயம், சங்கடமான விசயம் என்னவென்றால் அன்வார் வீட்டை அடகு வைத்துக் கட்சிக்குப் பணம் கொடுத்த வேளையில் மற்ற தலைவர்கள் நிதி திரட்ட எந்த முயற்சியும் மேற்கொள்ளாததுதான் என்றார்.

ரபிசி கட்சித் தேர்தலுக்காக நாடு முழுக்க பயணம் செய்து பரப்புரை செய்து வருகிறார். அடிக்கடி அஸ்மின் அன்வாருக்கு விசுவாசமானவர் அல்ல என்பதையும் கூறி வருகிறார்.

ஆனால், அஸ்மின் பெரும்பாலும் ரபிசியின் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதிலளிப்பதில்லை. அமைதி காக்கிறார்.