தேச நிந்தனைச் சட்டத்தை பாவிக்கக் கோரியதற்காக ராம்கர்பால் வருத்தம் தெரிவித்தார்

 

முன்னாள் போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) ஹனிப் ஒமாரை தேச நிந்தனைச் சட்டம் 1948 -இன் கீழ் விசாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டதற்காக புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் இன்று வருத்தம் தெரிவித்தார்.

அவ்வாறு கூறியது தமது தவறு என்று கூறிய ராம்கர்பால். அச்சட்டம் அகற்றப்பட வேண்டும் என்பது தமது நிலைப்பாடு என்பதோடு தமது கட்சியின் கொள்கையும் அதுவே என்றார். மேலும், அது ஒரு கொடூரமானச் சட்டம்; அது காலத்திற்கு ஒவ்வாதது என்று பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை அவர் குறிப்பிட்டார்.

இத்தவறுக்காக வருந்துகிறேன் என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

எனினும், ஹனிப் விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் இன்னும் கருதுகிறார். தண்டனை சட்டத் தொகுப்பு (பீனல் கோட்) செக்சன் 505-இன் கீழ் அவர் விசாரிக்கப்பட வேண்டும் என்றாரவர்.

கடந்த வியாழக்கிழமை யுசிடிஎம்மில் (UiTM) நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், டிஎபி மலாயாவை இரண்டாகப் பிரிக்க வேண்டும் – கிழக்குக்கரை மலாய்க்காரர்களுக்கும் மேற்குக்கரை சீனர்களுக்கும் – என்று விரும்பியதாகக் கூறினார்.

இதற்கான தமது தீர்வு டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் கிட் சியாங்கை சிறையில் அடைத்ததாகும் என்று கூறினார்.