இந்நாட்டில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் வித்தியாசமானது, ஆக இந்தியர்களின் பிரச்சனையை மற்ற இனங்களோடு ஒப்பிடக்கூடாது என பொ.வேதமூர்த்தி கூறியுள்ளார்.
நேற்றிரவு, ஜொகூர் பாரு, தாமான் ஜொகூர் ஜெயாவில் நடைபெற்ற இந்தியர்களுடனான சந்திப்பின் போது, இன்று மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குக் காரணம் முந்தைய பாரிசான் நேஷனல் அரசாங்கம் எனப் பிரதமர் துறை அமைச்சரான அவர் தெரிவித்தார்.
“தோட்டப் புறங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட இந்தியர்கள் வீடு, வேலை வாய்ப்புகள் இன்றி தவித்தனர். ஒரு மனிதனுக்கு மிக அத்தியாவசியமானது வீடு. தோட்டங்களில் இலவசமாகவே கிடைத்த பல அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாமல் போனபோது, இந்தியர்கள் கண்ணைக் கட்டி, காட்டில் விட்டது போலானார்கள்.
“மேம்பாடுகள் கருதி, தோட்டங்கள் துண்டாடப்பட்ட போது, இந்தியர்களின் வாழ்வாதாரத்தையும் அரசாங்கம் சீர்தூக்கி பார்த்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், இன்று இந்நாட்டு இந்தியர்களுக்கு இந்த அவலநிலை ஏற்பட்டிருக்காது,” என அவர் சொன்னார்.
‘செடிக்’ உருவாக ஹிண்ராப்டின் போராட்டமும் காரணம்
தற்போது ‘செடிக்’ திட்ட வரைவுக்குத் தலைமையேற்றிருக்கும் அவர், கடந்த 13-வது பொதுத் தேர்தலின் போது, பிஎன் உடனான ஒப்பந்தத்தில் ஹிண்ராப்ட் முன்வைத்த கோரிக்கைகளே, அதன் பின்னர் இந்த ‘செடிக்’ திட்டம் உருவாகக் காரணமாக அமைந்தது என்றார்.
“அதனால்தான், இன்று பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமது என்னை அதற்கு பொறுப்பாக நியமித்துள்ளார். பிஎன் அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தில், இத்திட்டத்திற்காக பல மில்லியன்கள் ஒதுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த முழுமையான தகவல், பணப் பட்டுவாடா செய்ய்யப்பட்ட கணக்கறிக்கைகள் எதுவும் நிறைவாக இல்லை, அதற்கான ஆதாரங்களும் இல்லை.”
“ஆக, இனி என் தலைமையின் கீழ், செடிக் செயல்முறைகளை முழுமையாக ஆய்வு செய்து, நான் மாற்றியமைக்க விரும்புகிறேன், அதன் செயல் அதிகாரிகள் உட்பட, முடிந்தால் அதன் பெயரையே மாற்ற எண்ணியுள்ளேன்,” என்றார் அவர்.
இந்தியர்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்த, தான் உண்மையாகப் பாடுபடப் போவதாகவும், அதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் என்றும் அவர் சொன்னார்.
B40 குழுவினரின் பிரச்சனைகளைக் கலைவது சவாலுக்குரியது
தோட்டத் துண்டாடலினால் B40 வர்க்கத்தினர் அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர், அவர்களிடமிருந்த தன்னம்பிக்கை பிடிங்கி எறியப்பட்டது. அச்சமயத்தில் அவர்களுக்கு முறையாக வழிகாட்ட, தன்னம்பிக்கையை உருவாக்க தகுதியான தலைவர்கள் சமூகத்தில் இல்லாமல் போனது துரதிஷ்டம் என்றார் வேதமூர்த்தி.
“தேவையான வாய்ப்பு, வசதிகளும் முறையான வழிகாட்டுதல்களும் இருந்திருந்தால், இந்தியர்கள் மற்ற இனங்களைப் போல, இந்நாட்டில் சிறப்பாக வாழ்ந்திருப்பர்,” என்றார் ஒற்றுமை மற்றும் சமூகத்துறை தலைவருமான அவர்.
“இதுவரை நான் ‘செடிக்’கின் பெரும் திட்டங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, காரணம், அதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன, எவ்வளவு நிதி வளம் இருக்கிறது என்று எனக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. ஆக, மிக விரைவில் அவற்றை நான் அறிவிப்பேன்.
“குறிப்பாக, தனித்து வாழும் தாய்மார்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கலைய பல திட்டங்கள் உள்ளன. ஆனால், முந்தைய காலங்களைப் போல, அவர்களை அழைத்து சில கைத்தொழில் பயிற்சிகளையும் சிறு ஊக்கத் தொகையும் வழங்கும் நடவடிக்கைகள் இனி இருக்காது. அவரவர் தேவைகளைக் கேட்டறிந்து, முறையான உதவிகள் வழங்கப்படும்.
செடிக் நிதிகளைத் தவறாகப் பயன்படுத்திய அமைப்புகளுக்கு எச்சரிக்கை
செடிக் நிதிகள் இனி கண்மூடித்தனமாக பொது அமைப்புகளுக்கு வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
“இதுவரை செடிக் மூலம் நிதிகள் பெற்ற அரசு சாரா அமைப்புகள் இரண்டு வகைப்படும், ஒன்று நேர்மையாக, உண்மையாக அப்பணத்தைக் கொண்டு மக்களுக்குச் சேவை ஆற்றியவை, மற்றது அப்பணத்தைத் தங்கள் சுய இலாபத்திற்காகப் பயன்படுத்தியவை.
“இந்த இரண்டாம் வகையினருக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன், அந்தக் காலம் பிஎன்-ஓடு முடிந்துவிட்டது. ஆக, அனைத்தையும் நிறுத்திவிட்டு வெளியேறிவிடுங்கள்,” என்று, பல அரசு சாரா இந்திய அமைப்புகள் கூடியிருந்த மண்டபத்தில் அவர் சொன்னார்.
அதேசமயம், சிறப்பாக பணியாற்றிய அமைப்புகளுக்கு அந்நிதி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
“இந்த அமைப்புகளை, நான் புதிதாக நியமிக்கவுள்ள அதிகாரிகள் கண்காணிப்பர். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம், இந்நாட்டு இந்தியர்களின் எதிர்காலத்தை மாற்றி அமைப்போம்,” என்றார் வேதமூர்த்தி.
ஜொகூரில் இந்தியர் மேம்பாட்டுக்காக 100 ஏக்கர் நிலம்
ஜொகூர் மாநிலத்தில், விவசாயத்துறையில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களுக்கு, முதல் கட்டமாக 100 ஏக்கர் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் வேதமூர்த்தி கோரிக்கை வைத்தார்.
“விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்கள், குறிப்பாக ஜொகூர் வாழ் இந்தியர்கள் நீண்ட காலமாக பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதில் முகான்மையானது சொந்த விவசாய நிலம் இல்லாதது.
“இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், அவர்களுக்கு ஜொகூர் மாநில அரசு 100 ஏக்கர் நிலத்தை முதல் கட்டமாக வழங்க வேண்டும். இந்நிலம் தற்போது விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்,” என்றார் வேதமூர்த்தி.
“இக்கோரிக்கையை நான் இங்கு அமர்ந்திருக்கும் ஜொகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன் பார்வையில் வைக்கிறேன். அவர் ஆட்சிக்குழுவில் பேசி, அதனை நமக்கு பெற்றுத்தர வேண்டும்,” என்று நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணனிடம் அவர் கூறினார்.
அடுத்த 5 ஆண்டுகளில் மாற்றம் செய்ய வேண்டும்
“அடுத்த தேர்தலில் என்ன நடக்கும் என்று உறுதியாகத் தெரியாத பட்சத்தில், இந்த 5 ஆண்டுகளில் நம்மால் இயன்றதைச் செய்து, இந்தியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்போம்,” என்றும் அவர் சொன்னார்.
பக்காத்தான் ஹராப்பான் எதிர்பார்த்ததை விட, பிஎன் அரசாங்கம் அதிக கடன்களை விட்டுச்சென்றுள்ளது என்ற அவர், இந்தியர்களைப் பொருளாதாரத் துறையில் முன்னேற்ற ஆலோசனைகளை வரவேற்பதாகவும் கூறினார்.
புதியக் கட்சி தொடக்கம்
அமைச்சராக நியமிக்கப்பட்டு இன்னும் முழுமையாக 2 மாதங்கள் கூட நிறைவடையதா நிலையில், இந்தியர்களுக்கென ஒரு புதியக் கட்சி தொடங்கவிருப்பதாக வேதமூர்த்தி தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பானில் பல்லினக் கட்சிகள் இருந்தாலும், இந்தியர்களுக்கெனப் பிரத்தியேகமாக ஒரு கட்சி இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறிய அவர், அப்புதியக் கட்சிக்கு ‘மலேசிய முன்னேற்றக் கட்சி’ எனப் பெயரிட்டுள்ளதாகவும், பதிவுக்காகக் காத்திருப்பதாகவும் சொன்னார்.