மலேசியர்கள் எதிர்நோக்கும் பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை மற்றும் குடியுரிமை பிரச்சனைகளுக்குத் தேசியப் பதிவு இலாகா விரைவில் தீர்வு காண வேண்டும் என ஜொகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
கடந்த இரு தினங்களாக, ஜொகூர் பாரு இராஜ மாரியம்மன் ஆலய மண்டபத்தில், ‘மலேசியக் குடிமக்கள் பதிவு திட்டம்’ எனும் நிகழ்ச்சியின் வாயிலாக, நீண்ட காலமாக தீர்க்கப்படாத பல குடியுரிமை பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என நம்பப்படுகிறது.
மாநிலத்தின் மனித வளம், ஒற்றுமை மற்றும் நுகர்வோர் துறையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட அந்நிகழ்ச்சியில், பாசீர் கூடாங், லாபிஸ், குளுவாங், சிகாமாட், மூவார் என மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் அடையாள ஆவணப் பிரச்சனைகளை எதிர்நோக்கும் மக்கள் திரண்டதாக அவர் சொன்னார்.
“இந்த இரு தினங்களில் மட்டும் சுமார் 900 பேர் இங்கு வந்திருந்தனர், இத்தனைக்கும், நாங்கள் பெரிய அளவில் விளம்பரம் எதுவும் செய்யவில்லை, முகநூலில் மட்டுமே தெரிவித்திருந்தோம், பிறகு சுற்றறிக்கை வெளியிட்டோம்.
“இந்தியர்கள்தான் வருவார்கள் என எதிர்பார்த்தோம், அவர்களுக்காகதான் இங்கு ஏற்பாடு செய்தோம், ஆனால், மற்ற இனத்தவர்களும் பெருமளவில் வந்தது எங்களுக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது, இந்தியர்கள் சுமார் 350 பேர் மட்டுமே. ஆக, இது ஓர் இனம் மட்டும் சார்ந்த பிரச்சனை அல்ல, தேசியப் பிரச்சனை என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்று டாக்டர் இராமகிருஷ்ணன் மலேசியாஇன்று-விடம் தெரிவித்தார்.
ட்ரா மலேசிய உதவியுடன் ஏற்பாடு
இந்நிகழ்ச்சிக்குப் பக்க பலமாக இருந்த ‘ட்ரா மலேசியா’ அமைப்பு பல ஆண்டுகள் இதில் அனுபவம் கொண்டவர்கள், குடியுரிமை பிரச்சனைகளைக் களைவதில் யு.என். அங்கீகாரம் பெற்றவர்கள். அவர்களின் பங்கு இந்த இரு தினங்களில் அளப்பறியது என்றும் அவர் சொன்னார்.
“பொதுவாக, பதிவிலாகா செல்லும் மக்களிடம் ஆவணங்கள் சரியில்லை என்று மட்டும்தான் அதிகாரிகள் சொல்லுவார்கள், முறையாக என்ன செய்ய வேண்டுமென்று விளக்கமளிக்க மாட்டார்கள். ஆனால், இன்று இங்கு ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, முறையான விளக்கங்கள் கொடுக்கப்படும். எனவே, இவற்றை பதிவிலாகா தள்ளுபடி செய்ய வாய்ப்பில்லை,” என அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும், 19 மற்றும் 20-ம் தேதிகளில் ஜொகூர், செத்தியா துரோப்பிக்காவில் உள்ள பதிவு இலாகாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரின் (முறையான ஆவணங்கள் உடையவர்கள்) பாரங்களும் முறைப்படி ஒப்படைக்கப்பட்டு; ஆவணங்கள் கிடைக்கும் வரை, ட்ரா மலேசியா தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் என்று அவர் விளக்கினார்.
பல சிக்கல்களை எதிர்நோக்கும் குடியுரிமை அற்ற மலேசியர்கள்
அடையாள ஆவணப் பிரச்சனைகளுக்கு, பழைய பல்லவியையேப் பாடிக்கொண்டிருக்காமல், அவற்றுக்குத் தீர்வு காண தேசியப் பதிவிலாகா முற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அடையாள ஆவணங்கள் இல்லாததால், அவர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்குவதாக டாக்டர் இராமா சுட்டிக்காட்டினார்.
“குடியுரிமை இல்லாததால், பல குழந்தைகள் பள்ளி செல்ல முடிவதில்லை, அவர்களின் கல்வி பாதிப்படைவதோடு, அவர்களின் எதிர்காலமும் கேள்விகுறியாகிவிடுகிறது.
“அதுமட்டுமின்றி, வங்கிகள் கடன் கொடுக்க முன்வராததால் அவர்களால் நாட்டில் சொத்துகள் வாங்க முடிவதில்லை. குடியுரிமை இல்லாததால் அரசாங்க மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற முடிவதில்லை, வெளிநாட்டினர்களைப் போல சிகிச்சைக்கு அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளது.
“ஆக, இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து அவர்கள் விடுபட, தேசிய பதிவிலாக சில தளர்வுகளைக் கொடுத்து, அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்,” என பெக்கோ சட்டமன்ற உறுப்பினருமான அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு, பல ஆண்டுகால முயற்சிகளுக்குப் பின்னர் சோர்ந்து போய் கிடந்த பலரும் இன்று இங்கு வந்துள்ளனர். ஆக, புதிய மலேசியாவில், தேசியப் பதிவிலாகா தனது அமைப்பு முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.