பிகேஆர் துணைத் தலைவர் தியான் சுவா, அன்வார் இப்ராஹிமை நாடாளுமன்றத்திற்குள் நுழைக்க ரஃபிசி ரம்லி இரகசியமாக ஒரு தேர்தலைத் திட்டமிடுவதாகக் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பக்காத்தான் ஹராபானில், திறந்த மற்றும் கருத்தொற்றுமைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம் என முன்னர் ரஃபிசிதான் குரல் கொடுத்து வந்தார், அதற்கு மாறாக இன்று அவர் செயல்படுகிறார் என தியான் சுவா கூறினார்.
“இதற்கு முன், நீங்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் சத்தியத்தைப் பற்றி அதிகம் பேசி வந்தீர்கள். ஆனால், இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் தலைமையில், மற்றவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் கட்சிக்கு ஒரு பெரிய முடிவை எடுக்க முடியும் என்று வாதிடுகிறீர்கள்.
“இது ஒரு ஜனநாயக அரசியல் கட்சியா அல்லது இரகசிய கும்பலா?” என அவர் டுவிட்டர் வழியாக நேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, கோத்தா பாருவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், கட்சியின் எம்பி ஒருவர், அன்வாருக்காக பதவி விலக உள்ளார் என ரஃபிசி அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பிகேஆர் தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து இதுவரை கலந்துபேசாத நிலையில், ரஃபிசி எப்படி அவ்வாறு அறிவிக்கலாம் என விமர்சித்துள்ளார்.
‘முக்கியமான சில முடிவுகள் எல்லோருடனும் கலந்துரையாடப்படாது, எங்களில் சிலர் மட்டுமே தீர்வு காண்போம்’, என ரஃபிசி கூறியது தியான் சுவாவைத் தூண்டிவிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, பிகேஆர் தலைமைச் செயலாளர் சைஃபுட்டின் நசுதியோன் – ரஃபிசியுடன் நெருக்கமானவர் என நம்பப்படும் – நாளை, புதன்கிழமை அன்வார் போட்டியிடவுள்ள இடம் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் 22-ம் திகதி தொடங்கும் பிகேஆர் தேர்தலில், துணைத் தலைவர் பதவிக்கு அஸ்மின் அலியை எதிர்த்து போட்டியிடவுள்ள ரஃபிசி , இப்போது நாடு முழுவதும் தீவிரமாகப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.