குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தக் கோரி, பி.எஸ்.எம். அரசாங்கத்திடம் மனு

மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) குறைந்தபட்ச சம்பள உயர்வை மதிப்பாய்வு செய்ய வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. தீபகற்ப மலேசியாவில் RM50 அதிகரிப்பு என்பது, தொழிலாளர்களை “அவமானம்” செய்வது போன்றது என்று அது கூறியது.

பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் மனித வளத்துறை அமைச்சர் எம். குலசேகரன் ஆகியோருக்கான ஆன்லைன் மனுவில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைமுறைக்கு வரவிருக்கும் RM1,050 புதிய குறைந்தபட்ச ஊதியத்தால், தொழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள் என பி.எஸ்.எம். கூறியுள்ளது.

“தேசிய ஊதிய ஆலோசனை கவுன்சில் RM1,170-ஐ மாதக் குறைந்தபட்ச சம்பளமாக முன்மொழிந்தது, பி.எஸ்.எம். RM1,500-ம், மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்.டி.யூ.சி) RM1,800-ஐயும் பரிந்துரைத்த வேளை, பக்காத்தான் ஹராப்பான் கடந்த பொதுத் தேர்தலின் போது RM 1,500 வழங்குவதாக வாக்குறுதி அளித்தது.

“ஆயினும், பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் இறுதியாக முதலாளிகளுடைய விருப்பத்திற்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியத்தை முடிவு செய்து, RM50 மட்டுமே உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது,” எனக் கூறிய பி.எஸ்.எம். தொழிலாளர்கள் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சிவரஞ்சனி மாணிக்கம், நேற்று தொடங்கப்பட்ட இந்த ஆன்லைன் பெட்டிசனுக்கு இதுவரை 500-க்கும் அதிகமானோர் ஆதரவு கையெழுத்து வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

60 ஆண்டுகளாக அம்னோ-பிஎன் அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள், மாற்றம் கருதியே பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களித்து, ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், இந்த 50 ரிங்கிட் உயர்வு என்பது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துமா என்பதை புதிய அரசாங்கம் கவனிக்கத் தவறிவிட்டது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தொழிலாளர்கள் நாங்கள் இந்த 50 ரிங்கிட் சம்பள உயர்வை எதிர்க்கிறோம்’ என்றும் அந்த ஆன்லைன் பெட்டிஷனின் (petition) குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வழிகாணும் வகையில், குறைந்தபட்ச சம்பளத்தை மீளாய்வு செய்ய வேண்டுமென ஹராப்பான் அரசாங்கத்தைப் பி.எஸ்.எம். கேட்டுக்கொண்டது.