ராசிவ் காந்தி கொலை வழக்கில் கைதான ஏழு தமிழர்களையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் – மலேசிய நாம் தமிழர் இயக்கம் கோரிக்கை

இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராசிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கால் நூற்றாண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், இராபர்ட் பயாசு, செயக்குமார், சாந்தன், ரவிச்சந்திரன், முருகன், நளினி ஆகிய ஏழு தமிழர்களையும் தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்ற இந்திய உச்சநீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு உடனே அவர்கள் விடுதலையை உறுதி செய்ய வேண்டுமென மலேசிய நாம் தமிழர் இயக்கம் கோரிக்கை வைப்பதாக அதன் தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

ராசிவ் காந்தி கொலையில் இன்னும் இன்றும் சில அவிழ்க்கப்படாத மர்மங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.

குண்டு அணிந்தவர் உடல் சில பாகங்களாக கிடைக்கும்போது, ராசிவ் காந்தி உடல் மட்டும் எப்படி தேட முடியாத அளவுக்கு சிதறிக் கிடிந்தது..? அப்படியென்றால் குண்டு யார் அணிந்திருந்தது..? எப்பொழுதும் ராசிவ் காந்தி உடனையே சுற்றி வரும் சில முக்கிய தலைவர்கள் குண்டு வெடிப்பன்று வராதது எப்படி..? ராசிவ் காந்தி கொலைக்கு முன்பே சுப்பிரமணிய சுவாமிக்கு எப்படி தெரியும் குண்டு வெடிப்பு பற்றி..? ராசிவ் காந்தி கொலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தொடர்பில்லை என்று மூன்றாவது நாளே விடுதலைப் புலிகளின் லண்டன் தலைமையகம்  அறிவித்ததை ஏன் சர்வதேச ஊடகங்களில் மறைக்கப்பட்டது..? தமிழீழ மக்களுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் ராசிவ் காந்தி செய்த துரோகத்தை ஏன் இந்திய உளவுத்துறை வெளிப்படுத்தவில்லை..?

இப்படி பல விடை தெரியாத எத்தனையோ குழப்பங்கள் இருக்க,  இந்த ஏழு தமிழர்கள்தான் குற்றம் புரிந்தார்கள் என பல ஆண்டுகளாக சிறைப்படுத்தியிருப்பது வேதனையின் உச்சம் என்றதோடு இவர்கள் விடுதலைக்காக தன் உடலையே நெருப்புக்கு இறையாக்கிய தங்கை செங்கொடி தியாகத்தை நினைவு கூர்ந்தார் திரு வீ. பாலமுருகன்.

எது எப்படியாயினும் தன் வாழ்நாளை இதுவரை சிறையிலேயே கழித்த இவர்களை மனிதாபிமான அடிப்படையிலும், இவர்கள் குடியரசுத் தலைவர்களுக்கு வழங்கிய கருணை மனுக்களை பரிசிலித்து  என்றோ விடுதலை செய்திருக்க வேண்டும்.

இப்போதாவது இந்த எழுவரின் விடுதலையை புலம்பெயர்ந்த உலக தமிழர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வேளையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை வாயிலாக இவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்து உலக தமிழர்கள் மானங்களை குளிர வைக்க வேண்டுமாய் மலேசிய நாம் தமிழர் இயக்கம் கோரிக்கை விடுப்பதாக  அதன் தேசிய வீயூக இயக்குநரும் பேராக் மாநில பொறுப்பாளருமான திரு பாலமுருகன் வீராசாமி கேட்டுக் கொண்டார்.