டாக்டர் இராமா : அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் முழுமானியம் பெறும் அரசாங்கப் பள்ளிகளாக மாற்ற வேண்டும்

நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் இடப் பிரச்சனை, நிதிப் பிரச்சனை போன்றவற்றிற்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமானால், அனைத்து தமிழ்ப்பள்ளிகளையும் அரசாங்கத்தின் முழு மானியம் பெறும் பள்ளிகளாக மாற்றியமைக்க வேண்டும் என ஜொகூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் இராமகிருஷ்ணன் சுப்பையா தெரிவித்துள்ளார்.

இன்று காலை, ஜொகூர் பாரு, கேலாங் பாத்தா தமிழ்ப்பள்ளியில், பள்ளி அளவிலான சுதந்திரத் தின நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

“பொதுவாக, தமிழ்ப்பள்ளிகள் இடப்பற்றாக்குறையை அதிகம் எதிர்நோக்குகின்றன. இதனால், இட நெருக்கடியான சூழ்நிலையில் மாணவர்கள் கல்வி பயில வேண்டியுள்ளது,” என்ற அவர், பல பள்ளிகளில் முறையான திடல் கூட இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

“இந்தப் பள்ளியைக் எடுத்துக்கொண்டோமானால், இது முன்னாள் ஹொக் லாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி. 2001-ல் இந்த இடத்திற்குத் தற்காலிகமாக மாற்றம் கண்டபோது இதன் பெயரும் மாற்றம் கண்டது.

“90 பிள்ளைகள் மட்டுமே பயிலக்கூடிய இப்பள்ளியில் தற்போது 170-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவருகின்றனர். இங்குத் திடல் இல்லை, போதிய வகுப்பறைகள் இல்லை, அறிவியல் கூடம் போன்ற மற்ற வசதிகளும் இல்லை. ஆக, பல பிரச்சனைகளுக்கிடையே இந்தப் பள்ளி இயங்கிவருகிறது,” என்றார் டாக்டர் இராமா.

பலமுறை முந்தைய அரசாங்கத்திடமிருந்து, இப்பள்ளிக்கு மானியங்கள் கொடுக்கப்பட்ட போதும், சிறு தொகை என்பதினால், பள்ளி எதிர்நோக்கிய பல பிரச்சனைகளைத் தீர்ப்பது முடியாமல் போனதாக, தலைமையாசிரியர், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி வாரியத்தின் பொறுப்பாளர்களுடன் கலந்துபேசிய அவர் தெரிவித்தார்.

“ஆக, இப்பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமானால், அரசாங்கம் இப்பள்ளிகளைத் தேசியப் பள்ளிகளாக அறிவிக்க வேண்டும்,” என்றார் அவர்.

“தற்போது, கல்வி அமைச்சின் பதிவில், இது இன்னும் ஹொக் லாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்றே இருக்கிறது. நாட்டில் பல தமிழ்ப்பள்ளிகள், தோட்டப் புறத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு மாற்றப்பட்டாலும், அவற்றின் பெயர் மாற்றம் காணாததால், கல்வி அமைச்சு அவற்றைப் பகுதி மானியம் பெறும், தோட்டப் பள்ளிகளாகவே நினைத்துள்ளது, இந்நிலை மாற வேண்டும்.

இந்நாள் வரை தமிழ்ப்பள்ளிகள் ‘பகுதி மானியம் பெறும் பள்ளி’ எனும் பெயரில் ‘மாற்றாந்தாய் குழந்தை’களாக நடத்தப்பட்டுள்ளன என்றும் பெக்கோ சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

“நான், ஆசிரியர்கள், பெ.ஆ.சங்கம் மற்றும் வாரியப் பொறுப்பாளர்களுடன் பேசியபோது இந்நிலையை உணர்ந்தேன். இந்தப் பகுதி மானியம் எனும் பெயரால், தமிழ்ப்பள்ளிகள் பெறும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதைக் காண முடிகிறது.

“ஆக, முதலில் நாம் நமது சிந்தனையை மாற்ற வேண்டும். நாமும் இந்நாட்டின் குடிமக்கள், நமக்கும் தாய்மொழிக் கல்வி என்பது அடிப்படைத் தேவை மற்றும் உரிமை  என்பதில் விழிப்படைய வேண்டும்.

“இப்பள்ளியை முழுமானியம் பெறும் பள்ளியாக மாற்ற பள்ளி நிர்வாகம் முயற்சிக்க வேண்டும். நான் அதற்கு முழு ஆதரவு வழங்குவேன்,” என்று அவர் கூறினார்.

கல்வி அமைச்சு, மாநிலக் கல்வி இலாகா மூலம் கேலாங் பாத்தா தமிழ்ப்பள்ளிக்குக் கிடைக்க வேண்டியதை ஏற்பாடு செய்யத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.