அன்வாருக்காக வான் அசிசா அல்லது நூருல் அவர்களின் தொகுதியை விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்- அம்பிகா

பிகேஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக போர்ட் டிக்சன் தொகுதி காலி செய்து கொடுக்கப்பட்டிருப்பதால் அதிருப்தி அடைந்திருப்போர் வரிசையில் முன்னாள் பெர்சே தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனும் சேர்ந்து கொண்டிருக்கிறார்.

அன்வாருக்காக அவரின் மனைவி அல்லது மகள் தொகுதியைக் காலி செய்து கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அம்பிகா கருதுகிறார்.

“அன்வார் திரும்பி வருவதில் எனக்குப் பிரச்னை இல்லை. அவருக்கு அந்த உரிமை உண்டு.

“ஆனால், அவரின் குடும்ப உறுப்பினரில் ஒருவர் அவரது தொகுதியை விட்டுக்கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதுதான் என் கருத்து” என்றவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் கூறினார்.

அன்வாரின் மனைவியும் துணப் பிரதமருமான வான் அசிசா வான் இஸ்மாயில் பாண்டான் எம்பி-ஆக உள்ளார். அவரின் மகள் நூருல் இஸ்ஸா பெர்மாத்தாங் பாவ் எம்பி.

அன்வார் இடைத் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆவதற்கு ஏதுவாக பிகேஆரின் டேனியல் பாலகோபால் அப்துல்லா தனது போர்ட் டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியைக் காலி செய்வதாக புதன்கிழமை அறிவித்தார்.