பிடி பெர்சத்து அன்வாரை வரவேற்கிறது, ரபிசியை எதிர்க்கிறது

 

எதிர்வரும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகளில் பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரமலியும் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா சானியும் பங்கேற்கக்கூடாது என்று போர்ட்டிக்சன் பெர்சத்து பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அன்வார் இடைத் தேர்தலில் போட்டியிடுவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ரபிசியும் அப்துல்லாவும் பரப்புரையில் கலந்து கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று கூறிய அப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ரம்லி அவாங், தங்களுடைய எச்சரிக்கையை ரபிசியும் அப்துலாவும் ஏற்க மறுத்தால், அன்வாருக்கு தங்களுடையப் பிரிவின் 2,000 உறுப்பினர்களின் ஆதரவுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறினார்.

பிகேஆருடன் எங்களுக்குப் பிரச்சனைகள் இல்லை, ஆனால் இந்த இருவரும் பிரதமர் மகாதிரும் டயம் ஸைனுடினும் அன்வாரை கவிழ்க்க விரும்புவதாக கூறுவதால் நாங்கள் அவமதிக்கப்படுவதாக கருதுகிறோம்.

ஆகவே, அவர்கள் இங்கு இருப்பது நிலைமையை மோசமாக்கும் ஏனென்றால் அவர்களின் குற்றச்சாட்டுகளால் பெர்சத்து உறுப்பினர்கள் மனவருத்தம் அடைந்துள்ளனர் என்று ரம்லியை மேற்கோள் காட்டி ஊடகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.