சந்தர்ப்பவாதி நஸ்ரி அளிக்க முன்வந்துள்ள ஆதரவை அன்வார் ஏற்றுக்கொள்ளக் கூடாது, ராம்கர்ப்பால் எச்சரிக்கை

 

போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் பிகேஆர் தலைவர் அன்வாருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்ய முன்னாள் அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் முன்வந்துள்ளதை ஏற்றுக்கொண்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து அன்வாரை டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்ப்பால் எச்சரித்துள்ளார்.

உதவி அளிக்க நஸ்ரி முன்வந்ததில் உள்நோக்கம் இருக்கிறது என்பது தெளிவு. ஆகவே பிகேஆரும் பக்கத்தான் ஹரப்பானும் ஓர் அம்னோக்காரரை தழுவிக்கொள்வது தவறாகும் என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையுடையவராக நஸ்ரி இருக்கிறார் என்று பலர் கூறியிருப்பதை ராம்கர்பால் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தில் இருக்கும் போது நஸ்ரி ஹரப்பானை கடுமையாக விமர்சித்துயுள்ளார் என்பது தெரிந்த ஒன்று. ஆனால் இப்போது அவர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அப்படி இல்லை என்கிறார். நஸ்ரி ஒரு சந்தர்ப்பவாதி என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை என்றாரவர்.

ஆதரவு அளிக்க முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் முன்வந்தால் அதை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று ராம்கர்பால் இன்று மதியம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேட்டார்.

நஸ்ரி அளிக்க முன்வந்துள்ள ஆதரவை அன்வார் ஏற்றுக்கொண்டால், அவர் மக்களுக்குப் பெரும் தீங்கிழைத்தவராவார் என்று புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரான ராம்கர்ப்பால் மேலும் கூறினார்.

அன்வாருக்கு தேர்தல் பரப்புரை செய்ய விரும்புவதாக முன்னாள் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் நஸ்ரி நேற்று மலேசியாகினியிடம் கூறினார். அவ்வாறு செய்வது அம்னோவின் மிகச் சிறந்த நலன்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

அதைச் செய்வதற்கான ஒரே வழி பிகேஆருடன் இணைந்து செயல்படுவதாகும்…அதற்கு நாம் சில நல்லெண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும்..நாம் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றால், அன்வாரை ஜெயிக்க விடுவோம் என்று நஸ்ரி கூறினார்.