மகாதிர் மாறி விட்டாரா?: ஆம், இல்லை என்கிறார் அன்வார்

 

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அவரது முன்னாள் எதிரியான பிரதமர் மகாதிர் முகமட்டை நம்புகிறாரா மற்றும் அவர் மாறி விட்டாரா என்று தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறார்.

இன்று மதியம் சிங்கப்பூர் வணிகர் சமூகத்தின் ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அன்வார், மகாதிரின் தனிமனிதப்பண்பு பெருமளவில் அதே மாதிரியாகத்தான் இருக்கிறது, ஆனால் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் கடந்த காலத்திலிருந்து பெருமளவில் விலகிச் சென்றுள்ளார் என்று அவர் கூறினார்.

‘மகாதிர் மகாதிர்தான் – கடுமையானவர், வெளிப்படையாக பேசுகிறவர், சினமூட்டக்கூடியவர், நயமாக மழுப்பிப் பேசாதவர் – சரி, நாமெல்லாம் அவரைப் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் அவர் சீர்திருத்தத்தில் ஈடுபாடு கொண்டுள்ளாரா? மலேசியா ஒரு ஜனநாயாக நாடாக எழும்ப வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

“அவர் சுயேட்சையான ஊழல் எதிர்ப்பு ஆணையாத்தில் நம்பிக்கை கொண்டுள்ளாரா? ஆம். அவர் சுதந்திரமான ஊடகத்தை பொறுத்துக் கொள்வாரா? ஆம். ஆக, அந்த அர்த்தத்தில் அவர் மாறி இருக்கிறார்”, என்று அன்வார் கூறினார்.

மகாதிர் போர் மனப்பான்மையுடையவர் என்று கூறிய அன்வார், சீர்திருத்தங்கள் வேண்டும் என்பதில் அவர் பொறுமையில்லாதவராக இருந்திருக்கிறார் என்றார்.

நமது சகாக்களிடம் வேகம் இல்லை. அரசுப் பணியாளர்கள் சீர்திருத்தங்களை வேகமாக முன்னெடுத்துச் செல்லவில்லை என்று மகாதிர் கருதுவதாகக் கூறிய அன்வார், அது அவரது உள்ளுரத்தைக் காட்டுக்கிறது. அதை நான் மதிக்கிறேன் என்று அன்வார் கூறினார்.

மகாதிரின் வாரிசு ஆவது நிச்சயமா? அவரை நம்புகிறீரா? என்று என்னிடம் கேட்கப்படுகிறது என்று கூறிய அன்வார். “ஆம், நான் நம்புகிறேன்” என்று பதில் அளித்ததாகக் கூறினார்.