ஷுரைடா : ரஃபிசியைப் புறக்கணியுங்கள், அவர் ‘முதிர்ச்சியற்றவர்’

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியை விமர்சித்து வரும் ரஃபிசி ரம்லியைப் புறக்கணிக்கும்படி, கட்சியின் உதவித் தலைவர் வேட்பாளர் ஷுரைடா கமாரூடின் கூறியுள்ளார்.

“பரவாயில்லை, அது அவருடைய முறை. அதுதான் அவரது பிரச்சார முறை என்றால், அது முதிர்ச்சியற்றது.

“நான் முதிர்ச்சியடைந்த அரசியலையே விரும்புகிறேன், ஆக பரவாயில்லை, முதிர்ச்சியற்ற நிலையில் செயல்படும் யாரையும் நாங்கள் புறக்கணிப்போம்,” என இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

நேற்று, ஸ்தார் டிவி நேர்காணல் ஒன்றில், பிகேஆர் துணைத் தலைவர் பதவியில் அஸ்மின் அலிக்குச் சவால் விடுவதாக ரஃபிசி கூறியிருந்தார். மேலும், முக்கிய முடிவுகள் எடுப்பதில், தனது கட்சிக்காரர்களின் செயல் ஏமாற்றமளிப்பதாக் கூறி, அவர்களையும் அவர் விமர்சித்து இருந்தார்.

கடந்த 2014, ‘காஜாங் மூவ்’ நடவடிக்கையிலிருந்து, ரஃபிசிக்கும் அஸ்மின் அலிக்கும் இடையிலான போட்டி வலுத்து வந்தது.

அண்மையில், பிகேஆர் தலைவர் பதவிக்குப் போட்டியின்றி தேர்வான அன்வாருக்காக போர்ட்டிக்சன் தொகுதி காலி செய்யப்பட்ட விவகாரம், அந்த இரு குழுவினருக்கும் இடையே, மீண்டும் சர்ச்சையைத் தூண்டிவிட்டுள்ளது.

போர்ட்டிக்சன் இடைத்தேர்தல் குறித்து, தங்கள் தரப்பினருடன் கலந்துபேசவில்லை என அஸ்மின் தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இருப்பினும், அன்வார் அத்தொகுதியில் வெற்றிபெற இருதரப்பினரும் ஒத்துழைக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.