அமானா : அன்வார் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படவே ‘பிடி மூவ்’

பக்காத்தான் ஹராப்பான் முக்கியத் தலைவர்கள் அரசாங்கத்தில் இணைந்து செயல்படவே, போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் அன்வார் இப்ராஹிம் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார் என அமானா கட்சியின் தேசியத் தலைவர் முகமட் சாபு கூறியுள்ளார்.

“14-வது பொதுத் தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்ற வேண்டுமானால், ஹராப்பான் முக்கியத் தலைவர்கள் அரசாங்கத்தில் இருப்பது மிக அவசியம் என்பதை அமானா உணர்ந்துள்ளது.

“நாடாளுமன்ற உறுப்பினராக அவர் செயல்பட, இந்த நடவடிக்கை தேவையான ஒன்று,” என இன்று ஓர் அறிக்கையில் மாட் சாபு தெரிவித்துள்ளார்.

போர்ட்டிக்சனில் போட்டியிடும் உரிமை அவருக்கு உண்டு, அவரின் முடிவை அமானா முழுமையாக ஆதரிக்கும் என்றும் அவர் சொன்னார்.

இதற்கிடையே, அமானா இளைஞர் பிரிவினர் வேறொரு அறிக்கையில், அன்வார் நாடாளுமன்றத்திற்குத் திரும்புவது, ஹராப்பானின் அதிகார மாற்றத் திட்டத்தை  நிறைவேற்ற உதவும் என்று கூறியுள்ளனர்.

பிரதமர் துன் டாக்டர் மகாதிரும் போர்டிக்சனில் போட்டியிட அன்வாருக்கு உரிமை உண்டு எனக் கூறியுள்ளார்.

அன்வாரின் முடிவை ஆதரிப்பதாகவும், ஆனால் பிரச்சாரத்தில் ஈடுபட போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.