பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், இராணுவத்தினர்போல் சீருடை அணிந்த பாஸ் தொண்டர் படையினரின் மரியாதை அணிவகுப்பைப் பார்வையிடும் படத்தைக் கண்டு முன்னாள் ஆயுதப் படை வீரர்களைக் கொண்டுள்ள பெட்ரியோட் அமைப்பு ஆத்திரமடைந்துள்ளது.
“ஹாடி மலேசிய இராணுவத்தினரின் முதல்நிலை சீருடை அணிந்த மரியாதை அணிவகுப்பைப் பார்வையிடுவதைக் அண்டு முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் அதிர்ந்து போனோம்.
“குற்றவியல் சட்டம்(574) , பிரிவு 140, இராணுவப் படைகளில் இல்லாத ஒருவர் இராணுவத்தினர் அணிவதைப் போன்ற உடைகளையோ மற்ற பொருள்களையோ வைத்திருப்பது குற்றம் என்கிறது”, என பெட்ரியோட் தலைவர் முகம்மட் அர்ஷாட் ராஜி இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அச்சம்பவம் நேற்று கோலா திரெங்கானுவில் 64வது பாஸ் முக்தாமாரில் நிகழ்ந்தது.
அச்சம்பவம்மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அர்ஷாட் கேட்டுக்கொண்டார்.
மலேசிய இராணுவத்தினரின் முதல்நிலை சீருடை சடங்குப் பூர்வ நிகழ்வுகளிலும் முக்கியமான நிகழ்வுகளிலும் மட்டுமே அணியப்படுவது வழக்கம் என்று அர்ஷாட் விளக்கினார்.
அரச குடும்பத்தினர், பிரதமர் , துணைப் பிரதமர், தற்காப்பு அமைச்சர், தளபதிகள் ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் அவர்களுக்கு மரியாதை தெரிவிப்பதற்கு இராணுவத்தினரும் போலீசும் அச்சீருடை அணிந்து மரியாதை அணிவகுப்பு நடத்துவதுண்டு.
மலேசிய ஆயுதப் படை அதன் இராணுவப் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் கட்டிக்காக்க வேண்டும் என்று அர்ஷாட் வலியுறுத்தினார்.
பாஸ் உறுப்பினர்கள் இராணுவத்தினர்போல் சீருடை அணிந்து மரியாதை அணிவகுப்பை நடத்தியதை ஆயுதப் படைத் தலைவர் முதல் ஆளாகக் கண்டித்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.