பாஸ் தீர்மானம்: யுஇசி நிராகரிக்கப்பட வேண்டும், சமயப்பள்ளி சான்றிதழ் அங்கீகரிக்கப்பட வேண்டும்

 

சீன சுயேட்சையான உயர்நிலைப்பள்ளிகளின் சான்றிதழை (யுஇசி) அங்கீகரிக்க புத்ரா ஜெயா அறிவித்துள்ள முன்மொழிதலை பாஸ் கட்சியின் 64-ஆவது முக்தாமார் இன்று ஏகமனதாக நிராகரித்துள்ளது.

அம்மாநாடு அரசு சார்பற்ற சமயப்பள்ளிகள் – மாஹாட் தாபிஸ் – மற்றும் போன்டோக் பள்ளிகள் ஆகியவற்றின் சான்றிதழ்களை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவாதம் ஏதுமின்றி ஏற்றுக்கொண்டது.

இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த லெங்கோங் பாஸ், வேலை மற்றும் பல்கலைக்கழக நுழைவு ஆகியவற்றுக்கு இஸ்லாமியக் கல்வி முறையை நிலைநிறுத்துவது முக்கியமாகும் என்று கூறியது.

யுஇசி மீதான தீர்மானத்தை பாஸ் உலாமா பிரிவு முன்வைத்தது. யுசியை அங்கீகரிப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல என்று உலாமா பிரிவின் பிரதிநிதி ஸுல்கிப்ளி கூறியதோடு யுஇசிக்கான பாடத்திட்டங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றும் கூறினார்.

நாட்டின் கல்வி அமைவு முறை நாட்டு மக்களிடையே அமைதியை ஊக்குவிக்கும் கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறிய அவர், யுஇசியை அங்கீகரிக்க வேண்டும் என்பது “ஆபத்தான” கோரிக்கை என்று எச்சரித்தார்.