நஜிப் அப்துல் ரசாக் தம் வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்த கோடிக்கணக்கான ரிங்கிட் அத்தனையும் “நன்கொடைகள்” என்றுரைத்து அதற்கு ஆதாரமாக சவூதி இளவரசரிடமிருந்து வந்த கடிதங்களையும் வெளியிட்டிருந்தார். ஆனால், அக் கடிதங்களில் சவூதி இளவரசரின் கையெழுத்து இல்லை என்று எட்ஜ் வீக்லி-இல் வந்துள்ள ஒரு செய்தி கூறுகிறது.
கடந்த வாரம் முன்னாள் பிரதமர் அவரது முகநூல் பக்கத்தில் சவூதி இளவரசர் “சவூத் அப்துல் அசீஸ் அல்-சவூத்” கையெழுத்திட்ட கடிதம் என்று குறிப்பிட்டு பிப்ரவரி முதலாம் தேதியிடப்பட்ட கடிதமொன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.
தி எட்ஜ் வீக்லி-இல் வெளிவந்துள்ள் செய்தி ஒன்று, அதுவும் மேலும் இரண்டு கடிதங்களும் தன்னை இளவரசர் அப்துல் அசீஸ் அல்-சவூத்தின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் முகம்மட் அப்துல்லா அல்- கோமானால் தயாரிக்கப்பட்டுக் கையெழுத்திடப்பட்டவை என்று கூறிற்று.
“முகம்மட் அப்துல்லா விசாரணை அதிகாரிகளிடம் பேசியபோது தாமே இளவரசர் சார்பில் கடிதங்களை எழுதிக் கையெழுத்திட்டதாக தெரிவித்தார்”, என்று அச்செய்தி கூறியது. நஜிப்பின் கணக்குக்கு மாற்றிவிடப்பட்ட பில்லியன்கள் குறித்து அவரிடமிருந்து மேல்விவரங்கள் பெற முடியவில்லை. “அவை சவூதி அரசக் குடும்ப நலன்கள்” தொடர்பானவை என்பதால் அது பற்றிக் விவரிக்க அவர் மறுத்து விட்டார்.