அம்னோ எம்பிகள் வெளியேறிவரும் வேளையில் மகாதிரைச் சந்தித்தாராம் ஹிஷாமுடின்

முன்னாள் அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன் புத்ரா ஜெயாவில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைச் சந்தித்துள்ளார்.

நேற்று நடந்த அவர்களின் சந்திப்பு இரண்டு மணிநேரம் நீடித்ததாக தகவலறிந்த வட்டாரமொன்று கூறியது. ஆனால், என்ன விவாதிக்கப்பட்டது என்பதை வெளியிட அவர் மறுத்தார்.

மகாதிரின் ஊடக ஆலோசகர் ஏ.காடிர் ஜாசினும் அச்சந்திப்பு நடைபெற்றதைத் தம் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அம்னோ அமைச்சர்கள் இருவர்- முஸ்தபா முகம்மட் மற்றும் அனிபா அமான் – கட்சியிலிருந்து வெளியேறியுள்ள வேளையில் அச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

மேலும் பல அம்னோ எம்பிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளியேறக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே , மலேசியாகினி செம்ப்ரோங் எம்பியான ஹிஷாமுடினைத் தொடர்புகொள்ள முயன்று வருகிறது.