நஜிப்: அம்னோ -பாஸ் உடன்பாடு நல்லதுக்கே

தமக்குப் பின் அம்னோ தலைமைப் பொறுப்பை ஏற்ற அஹ்மட் ஜாஹிட்டைத் தற்காத்துப் பேசும் முன்னாள் அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோவும் பாஸும் ஒத்துழைப்பதில் “தவறு ஏதுமில்லை” என்கிறார்.

முகநூலில் இதைக் குறிப்பிட்ட நஜிப், இரண்டுமே எதிர்க்கட்சிகள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

“அம்னோவும் பாஸும் ஒத்துழைப்பதில் தவறில்லை. இரண்டுமே எதிரணியில் இருக்கின்றன. டிஏபியும் பிகேஆரும் எதிர்க்கட்சிகளாக இருந்தபோது பாஸுடன் இப்படி உடன்பாடு செய்துகொண்டது உண்டு”, என்றாரவர்.

பக்கத்தான் ரக்யாட் கூட்டணி பற்றித்தான் நஜிப் குறிப்பிடுகிறார். ஏழாண்டுகள் நீடித்த அக்கூட்டணி பாஸ் 2015-இல் அதிலிருந்து வெளியேறியதை அடுத்து முறிந்து போனது.

சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் அம்னோ- பாஸ் ஒத்துழைப்பைக் கண்டோம். அத்தேர்தலில் எதிரணி வாக்குகளைச் சிதறடிக்கக் கூடாது என்பதற்காக பாஸ் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது.

அடுத்த இரண்டு இடைத் தேர்தல்களிலும் இந்த ஒத்துழைப்பு தொடர்ந்தது. ஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் பிஎன் போட்டியிடாமல் பாஸ் போட்டியிட இடமளித்தது. பலாக்கோங் இடைத் தேர்தலில் பாஸ் மசீச வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தது.

அம்னோ -பாஸ் ஒத்துழைப்பின் உச்சக் கட்டம் அம்னோ தலைவர்களின் குழு ஒன்றுக்குத் தலைமை தாங்கி ஜாஜிட் திரெங்கானுவில் பாஸ் முக்தாமாரில் கலந்து கொண்டது.