நஜிப் கைது செய்யப்பட்டார்

 

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (எம்எசிசி) கைது செய்யப்பட்டார். அவர் அதிகார அத்துமீறல் குற்றங்களுக்காக நாளை குற்றம் சாட்டப்படுவார்.

இன்று பிற்பகல் 4.13 அளவில் அவர் புத்ரா ஜெயாவில் எம்எசிசி தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

1எம்டிபி விவகாரத்தில் தொடர்புபடுத்தப்பட்டுள்ள 700 காசோலைகள் பற்றி அதிகாரிகள் அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.

நஜிப் எம்எசிசி சட்டம் 2009, செக்சன் 23(1)-இன் கீழ் பதவியில் இருக்கும் போது நடந்த அதிகார அதுமீறல்கள் சம்பந்தமாக பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் காணப்பட்ட ரிம2.6 பில்லியன் சம்பந்தமுள்ளதாகும்.

இப்பணம் 1எம்டிபியிலிருந்து வந்ததாகும் என்று விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அத்தொகை ஒரு நன்கொடை என்றும் அது சவூதி அரேபியா வட்டாரங்களிலிருந்து வந்தது என்றும் நஜிப் கூறிக்கொண்டிருக்கிறார்.

சட்டத்துறை தலைவரின் அலுவலகம் பச்சைக் கொடி காட்டிய பின்னர் இந்த மிக அண்மையக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன என்று எம்எசிசி கூறியது.

நஜிப் நாளை (செப்டெம்பர் 20) பிற்பகல் மணி 3 அளவில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார்.