கைரி : ‘வெட்கப்படாதீர்கள் துன், உங்கள் அரசாங்கம்தான் பிடிபிடிஎன் கல்விக் கடனை ஏற்றுக்கொண்டது

தேசிய உயர்க்கல்வி கடனுதவி (பிடிபிடிஎன்) தொகையைத் திருப்பி செலுத்தாத சிலரின் போக்கைக்கண்டு தான் வெட்கப்படுவதாகக் கூறியுள்ள பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் கூற்றை, ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுட்டின் விமர்சனம் செய்துள்ளார்.

அத்தொகையைத் திருப்பி செலுத்த, கால அவகாசம் கொடுத்தது பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம்தான், எனவே மகாதிர் வெட்கப்படத் தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

“வெட்கப்படாதீர்கள் ……. அவர்களைக் கருப்புப் பட்டியலில் இருந்து வெளியாக்கியது யார்? ரிம 4,000 மாதச் சம்பளம் கிடைக்கும்போது, அப்பணத்தைத் திருப்பி செலுத்தினால் போதும் என வாக்குறுதி கொடுத்தது யார்?” என இன்று தனது டுவிட்டரில் கைரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை, ஆனால் அரசாங்கம் அவர்களைக் கருப்புப் பட்டியலில் இருந்து விலக்கிவிட்டது.

இதுவரை திருப்பிச் செலுத்தப்படாத பிடிபிடிஎன் கடன் ஏறக்குறைய RM36 பில்லியன் இருக்கிறது என தகவல்கள் கூறுகின்றன.
இன்று காலை, மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடம் பேசிய மகாதிர், சுய சம்பாதியம் உண்டான பின்னரும், பிடிபிடிஎன் கடனைத் திருப்பி செலுத்தாத சிலரின் போக்கைக் கண்டு தான் வெட்கப்படுவதாகக் கூறியிருந்தார்.

குறைந்த அளவிலேயே பிடிபிடிஎன் கடன் வசூல் செய்யப்படுவதால், அந்நிதியைத் தொடர்ந்து வழங்க அரசாங்கம் கடன் வாங்க வேண்டி வரலாம் என்ற அச்சம் காரணமாக, பிடிபிடிஎன் கடன் தொடர்பான ஹராப்பானின் வாக்குறுதியை கைரி முன்னமே எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.