எதிர்வரும் அக்டோபர் 13-ல் நடைபெறவுள்ள போர்ட்டிக்சன் (பி.டி.) இடைத்தேர்தல் உட்பட, எந்தவொரு அரசியல் பிரச்சாரத்திற்கும், பக்காத்தான் ஹராப்பான் அரசு இயந்திரத்தைப் பயன்படுத்துவதை அமானா ஏற்றுக்கொள்ளாது என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
அமானா தேர்தல் கமிஷனின் இயக்குநர், டாக்டர் ஹத்தா ரம்லி, அக்கூட்டணி வெற்றிபெற அவர்களின் அரசியல் இயந்திரமே போதுமானது என்பதால், பிரச்சாரங்களுக்கு அரசாங்க அதிகாரிகளின் நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
“அரசியல் பிரச்சாரங்களில் அரசு அதிகாரிகளைப் பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை. அமைச்சுகளின் அதிகாரிகள் களமிறங்க வேண்டும் எனும் பரிந்துரைகள் உள்ளது, அது தேவையில்லை என நினைக்கிறேன், முன்பு பாரிசான் நேசனல் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தியதை நாம் விரும்பவில்லை, நாம் எதைச் சொன்னோமே அதையே செய்வோம்.
“அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நேரத்தை நமக்காக (ஹராப்பான்) வீணடிக்க வேண்டாம்,” என அவர் கூறினார்.
அதேசமயம், அரசாங்க முகவர்கள் அல்லது அரசு அமைப்புகள், தானாக விருப்பப்பட்டு பணியாற்ற விரும்பினால், அதில் பிரச்சனை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் அரசு இயந்திரங்களைப் பயன்படுத்த மாட்டோம் என அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.
“இந்த இடைத்தேர்தலில் அரசாங்க வசதிகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தியுள்ளேன். அமைச்சகங்களில் இருக்கும் தலைவர்கள், கட்சி தலைவர்களாக மட்டும் வந்து பிரச்சாரம் செய்வதை நான் உறுதி செய்வேன்,” என்றார் அவர்.