மகாதிர் பிரதமர் ஆனதில் அன்வாருக்கு மகிழ்ச்சி

துன் டாக்டர் மகாதிர் முகமட், மலேசியப் பிரதமர் ஆனதில் தனக்கு ‘மகிழ்ச்சி’ என அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

தற்போது பிரதமராக பதவியேற்றிருக்கும் மகாதிருக்கு அதிகமான பணிகள் உள்ளதாக, அல் ஜஷீரா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அன்வார் இன்று கூறியுள்ளார்.

“அவருக்கு ஒரு பெரிய வேலை உண்டு, நமக்கு இப்போது ஒரு வலுவான தலைவர் வேண்டும், அவர் அதை நன்றாகவே செய்கிறார்,” என்று அவர் கூறினார்.

மலேசியாவின் எட்டாவது பிரதமராக அன்வார் வரவேண்டும் என பக்காத்தான் ஹராப்பான் காய் நகர்த்திவரும் வேளையில், மலேசியர்கள் விரும்பும் தலைவர் யார் – அன்வாரா அல்லது டாக்டர் மகாதீரா என அன்வாரிடம் கேட்டபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார்.

மகாதிர் நாட்டை நிர்வகிக்கும் முறையை மலேசியர்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் அதில் எனக்கு பிரச்சனையில்லை என்று அன்வார் கூறியுள்ளார்.

“மலேசியர்கள் அவரை ஆதரிப்பதில் எனக்கு கவலை இல்லை, அவர் மிகவும் பிரபலமானவர் என நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

ஒரு கட்டத்தில், நிகழ்ச்சி தொகுப்பாளர் மேஹ்டி ஹஸ்சான், டாக்டர் மகாதீரையும் நஜிப்பையும் எப்படி அன்வாரால் மன்னிக்க முடிந்தது என்று கேட்டபோது, “மன்னிப்பு என்பது ஒரு வேதனையான செயல், அது எவ்வளவு எளிதானது அல்ல,” என்று அன்வார் சொன்னார்.

“நாங்கள் (அன்வார் மற்றும் டாக்டர் மகாதிர்) இப்போது நாட்டைப் பற்றி பேசுகிறோம், நீதி பற்றி பேசுகிறோம், இரக்கத்தைப் பற்றி பேசுகிறோம்.

“மன்னிப்பு வழங்காமல், இரக்கம் காட்டாமல் இருந்துவிட்டால் மதத்தைப் பின்பற்றுவது எதற்கு?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அவரது குடும்பம் சுமார் இருபது ஆண்டுகளாகப் பல துன்பங்களை அனுபவித்த போதிலும், எந்தவொரு பழிவாங்கும் எண்ணமும் தனக்கு இல்லை என்றார் அன்வார்.