விஷ மது அருந்தி, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உட்பட சிலர் இறந்ததன் காரணமாக, அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் முதலாளிகள் அவர்களைக் கண்காணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எம். குலசேகரன், குறைந்த விலையிலான மதுபானம் பெரும்பாலும் வெளிநாட்டவர்களின் தேர்வாக இருப்பதுடன், அவர்களில் சிலர் சுயமாகவே மதுபானம் தயாரிக்கக்கூடியவர்களாகவும் இருப்பதாகக் கூறினார்.
“விஷ மது தொடர்பான ஆபத்தான சம்பவங்கள் அதிகரிப்பதைத் தடுக்க, அந்நியத் தொழிலாளர்கள் தங்கும் இடம் போன்றவற்றை முதலாளிகள் பரிசோதிப்பது அவசியம் என நான் நம்புகிறேன்.
“வெளிநாட்டு தொழிலாளர்கள் நல்ல வருமானம் பெறவே இங்கு வருகிறார்கள், குடும்பங்களில் இருந்து விலகி இருக்கக்கூட அவர்கள் தயாராக உள்ளனர், அத்தகையவர்கள் விஷ மதுவினால் பாதிக்கப்படாமல் இருப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இன்று காலை, ஈப்போ, மெங்கிளம்பூ, புக்கிட் கிளேடாங்கில், மனிதவள அமைச்சுடன் இணைந்த, ஆரோக்கியமான வாழ்க்கை முறை திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், நிருபர்களைச் சந்தித்துப் பேசினார்.
கடந்த திங்கட்கிழமையில் இருந்து, நேபாள், வங்காள தேசம், மியான்மார் மற்றும் மலேசியர் உட்பட, இருபதுக்கும் மேற்பட்டோர் இந்த விஷ மதுவிற்குப் பலியாகி உள்ளனர். இன்னும் சிலர் கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பேராக் மாநில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்விஷயத்தில் பொறுப்பில் உள்ள அமைச்சுகள், தரம் குறைந்த மது விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களைக் கண்காணித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பணிக்கப்பட்டுள்ளதாகவும் குலசேகரன் தெரிவித்தார்.
“குறைந்த விலை மது மிக சுலபமாக, பல இடங்களில் கிடைக்கிறது, நாங்கள் இத்தகைய மதுவை விற்கும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கிறோம். மேலும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, பொது மக்கள் தரங்குறைந்த மதுவைத் தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்துகிறோம்,” என்று அவர் சொன்னார்.
-பெர்னாமா