கிட் சியாங்: மகாதிருடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டால் குவான் எங் மீதான வழக்குகள் கைவிடப்படுமென பேரம் பேசப்பட்டது

டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்,   டாக்டர் மகாதிர் முகம்மட்டுடனான  உறவுகளைத் துண்டித்துக் கொண்டு  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப்   பதவி இறக்கும் முயற்சியையும் நிறுத்திக் கொண்டால்    தம் மகன் லிம் குவான் எங்மீதான வழக்குகள் கைவிடப்படுமென 2016இல் தம்மிடம் பேரம் பேசப்பட்டதாக மீண்டும் கூறியுள்ளார்.

சிட்னியில் பேசிய கிட் சியாங், புதிய மலேசியாவில் நீதிமுறையின்மீது நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில் இப்படிப்பட்ட நடைமுறைகள் களையப்பட வேண்டும் என்றார். தம்முடன் பேரம் பேசியவர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

“நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். 2016 இல் எனக்கு ஒரு செய்தி வந்தது குவான் எங் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட வேண்டுமானால் பதிலுக்கு நான் பிரதமர் நஜிப் பிரதமர் பதவியிலிருந்து இறக்க டாக்டர் மகாதிருடன் ஒத்துழைக்கக் கூடாது என்று”. என அவர் கூறினார்.

கிட் சியாங் நேற்றிரவு பெர்செ-இன் சிட்னி கிளையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார்.