நாடாளுமன்றத்தில் வீற்றிருக்கும் மசீச-வின் ஒரே பிரதிநிதியான டாக்டர் வீ கா சியோங், தற்போதைய அரசு நிறுவனத்தைச் சீர்திருத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் எதிர்க்கட்சி பிரதிநிதியாக இருந்தபோதிலும், மக்கள் மற்றும் நாட்டிற்கு நன்மைகளைக் கொடுக்கக்கூடிய ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
அமலாக்க முகமை நேர்மை ஆணையத்திற்குப் (இ.ஏ.ஐ.சி.) பதிலாக, போலிஸ் புகார்கள் மற்றும் முறைகேடு ஆணைக்குழுவை (ஐ.பி.சி.எம்.சி) அமல்படுத்தும் புத்ராஜெயாவின் முன்மொழிவைத் தான் ஆதரிப்பதாக ஓர் ஊடகச்செய்தி அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
13 ஆண்டுகளுக்கு முன்பு, அரச மலேசியக் காவல்படையின் (பிடிஆர்எம்) செயல்திறன்களை மேம்படுத்த வேண்டும் எனும் நோக்கில், அரச விசாரணை ஆணையத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 125 பரிந்துரைகளில் ஐ.பி.சி.எம்.சி.-உம் ஒன்று என வீ தெரிவித்தார்.
“போலிஸ் மீதான பொது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, பிடிஆர்எம்-ன் இமேஜ்-ஐ விரைவில் மேம்படுத்த வேண்டும்,” என்றார் அவர்.
பொது புகார் பிரிவுக்குப் பதிலாக, ‘ஓம்பட்ஸ்மன்’ மலேசியா-ஐ தோற்றுவிக்க வேண்டுமெனும் அரசாங்கத்தின் பரிந்துரையையும் ஆதரிப்பதாக அந்த ஆயேர் ஈத்தாம் எம்பி தெரிவித்தார்.
அரசாங்க இயந்திரங்கள் தொடர்புடைய பொது புகார்கள் குறித்து விசாரணை செய்யும் ஓர் அதிகாரப்பூர்வ அல்லது பகுதி அதிகாரப்பூர்வ விசாரணையை ‘ஓம்பட்ஸ்மன்’ குறிக்கிறது.
நேற்று, ஐ.பி.சி.எம்.சி. மற்றும் ‘ஓம்பட்ஸ்மன்’ மலேசியா குறித்த அறிவிப்புகளை பிரதமர் துன் டாக்டர் மகாதிர் செய்தார்.
அதுமட்டுமின்றி, மனித உரிமை ஆணையத்தின் (சுஹாகாம்) வருடாந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, விவாதிக்க வேண்டும் என்பதையும் வீ ஆதரித்தார்.