பிஎன்-ஐ கலைத்துவிடுங்கள், இல்லையேல் அம்னோவை நீக்கிவிடுங்கள் : அம்னோ-பாஸ் கூட்டணியை மசீச நிராகரிக்கிறது

அம்னோ மத அரசியலை நோக்கி நகருமானால், பாரிசான் நேசனலில் இருந்து அம்னோவை விலக்கிவிடுவோம் என மசீச தேசியத் தலைவர் லியோ தியோங் லாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று, 2018 சிலாங்கூர் மசீச கொன்வென்சனில் பேசிய லியோ, பாரிசான் நேசனல் பண்பாட்டு பன்முகத்தன்மையைக் கடைப்பிடித்து, இந்நாட்டு மக்களின் நல்லிணக்கத்தைக் காக்க வேண்டும் என்றார்.

அம்னோ இனம், மத அணுகுமுறையைப் பின்பற்றுமானால், பாரிசான் நேசனல் கலைக்கப்படும், இல்லையேல், அம்னோவை அக்கூட்டணியில் இருந்து மசீச விலக்கிவிடும்.

“அம்னோ உட்பட எந்தக் கட்சியாக இருந்தாலும், இனம், மதம் அல்லது தீவிரவாதத்தை நோக்கி நகர்கிறது என்றால் இதுதான் அவர்களுக்குப் பதில்,” என்று லியோ தனது உரையில் தெரிவித்தார்.

“நாங்கள் (மசீச) மிதவாதக் கொள்கையைக் கடைப்பிடிப்பவர்கள், நாங்கள் ஏன் பி.என்.-இல் இருந்து விலக வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பாஸ் மற்றும் அம்னோ உடனான ஒத்துழைப்பு குறித்து கேட்டபோது, மசீச அதனை ஆதரிக்காது என்றார் லியோ.