வாக்களிப்பில் அஸ்மின் அணி முன்னணி, பிகேஆர் துணைத் தலைவர் பதவி போட்டி உக்கிரமாக உள்ளது

பிகேஆர் தேர்தல் | பினாங்கில், அஸ்மின் அலி மற்றும் ரஃபிசி ரம்லிக்கு இடையிலான பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டி மிகவும் உக்கிரமாக இருந்தது.

இருப்பினும், அந்தப் பொருளாதார விவகார அமைச்சரின் அணி, வாக்குச்சீட்டு பெட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நேற்று பினாங்கில் நடந்த அக்கட்சி தேர்தலில், அஸ்மினுக்கு 3,326 வாக்குகள் கிடைத்த வேளை, ரஃபிசிக்கு 3,150 வாக்குகள் கிடைத்தன.

இருப்பினும், மற்ற முக்கியப் பதவிகளுக்கான போட்டி அவ்வாறு இல்லை. பினாங்கு பிகேஆர் உறுப்பினர்கள், அஸ்மினுக்கு நெருங்கியவர்களையேப் பிகேஆர் உதவித் தலைவர்களாகவும், ஏஎம்கே தலைவர், துணைத் தலைவர் மற்றும் மகளிர் தலைவியாகவும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பிகேஆர் உதவித் தலைவர் பதவிக்கு, நூருல் இஸ்ஸா அன்வார் 4,039 வாக்குகள் பெற்று மற்ற போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டார்.

ரஃபிசி அணியின் உதவித் தலைவர் பின் தள்ளப்பட்டார்

அஸ்மின் அலி அணியைச் சேர்ந்த, அம்பாங் எம்பி ஷுரைய்டா கமாருட்டின் (2,646 வாக்குகள்) , பத்து முன்னாள் எம்பி தியான் சுவா (2,577 வாக்குகள்) மற்றும் கோலா லங்காட் எம்பி சேவியர் ஜெயக்குமார் (2,316 வாக்குகள்) ஆகிய மூவரும் அதிக வாக்குகள் பெற்றுள்ளனர்.

நாடுதளுவிய அளவில், முதல் நான்கு இடங்களில் வரும் வேட்பாளர்கள், 4 உதவித் தலைவர்கள் பதவியை ஏற்பர்.

தற்போது, ரஃபிசி அணியைச் சேர்ந்த, செலாயாங் எம்பி வில்லியம் லியோங், சுங்கை பட்டாணி எம்பி ஜொஹாரி அப்துல் மற்றும் சுங்கை சிப்புட் எம்பி எஸ் கேசவன் ஆகியோர் முறையே 6-வது, 7-வது மற்றும் 8-வது நிலையில் உதவித் தலைவர் பதவிக்கு உள்ளனர்.

அதைப்போன்றே, பிகேஆர் இளைஞர் பதவிக்கு, அஸ்மின் அலி அணியைச் சேர்ந்த அஃபிஃப் பஹார்டின் 802 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். ரஃபிசி அணியைச் சேர்ந்த அக்மால் நசீர் 575 வாக்குகள் பெற்று இரண்டாம் நிலையிலும், நஜ்வான் ஹலிமி (163 வாக்குகள்) மூன்றாம் நிலையிலும் உள்ளனர்.

பிகேஆர் மகளிர் தலைவி பதவிக்கு, ரஃபிசி அணியைச் சேர்ந்த ஃபூஷியா சாலே (குவாந்தான் எம்பி) 882 வாக்குகள் பெற்றுள்ள வேளையில், அஸ்மின் அலி அணியைச் சேர்ந்த ஹனிஷா தல்ஹா 1,324 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

 ஜே.பி.பி. முடிவுகளை உறுதி செய்தது

இந்த முடிவுகளை, பிகேஆர் மத்திய தேர்தல் செயலவையின் (ஜேபிபி) தலைவர் ரஷிட் டின் உறுதிபடுத்தினார்.

நேற்று, கெடாவிலும் பிகேஆர் கட்சி தேர்தல் நடைபெற்றது. இருப்பினும், மின்னனு வாக்களிப்பில் ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாருகள் காரணமாக கெடா தேர்தல் முடிவுகள் இரத்து செய்யப்பட்டன.

மின்னனு வாக்களிப்பு சரிசெய்யப்படும் வரையில், மற்ற மாநிலங்களில் வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிகேஆர் மொத்த உறுப்பினர்களில், பினாங்கு மாநில உறுப்பினர்கள் 10 விழுக்காட்டிற்கும் குறைந்தவர்களே. தற்போது, அஸ்மின் அணி முன்னணியில் இருப்பதுபோல் தோன்றினாலும், உண்மையான போட்டி இனிதான் தொடங்கவுள்ளது.

பினாங்கு போல் அல்லாமல், மற்ற மாநிலங்களில் அதிகமானோர் பிகேஆர் கட்சியில் புதிதாக இணைந்துள்ளனர். இது கட்சி தேர்தலின் வாக்குகள் சமநிலையை மாற்றியமைக்க கூடும்.

கடந்த ஜூன் 6 முதல் ஜூன் 25 வரை, பினாங்கில் பிகேஆர் உறுப்பினர் எண்ணிக்கை 16.12 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ள வேளை, மலாக்காவில் 120.4 விழுக்காடும் நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூரில் முறையே 110 மற்றும் 81.5 விழுக்காடும் உயர்ந்துள்ளது.

அதே காலகட்டத்தில், அதிக மக்கள் தொகை கொண்ட சிலாங்கூர் மாநிலத்தில் 35.33 விழுக்காடு, 177,834-இல் இருந்து 240,671 –ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது.