பெர்லிஸ் அம்னோ உறுப்பினர்கள் பலர் பெர்சத்துவில் சேர்வார்கள்- வான் சைபுல்

பெர்லிசில் அம்னோ உறுப்பினர் பலர் பெர்சத்துவில் சேரத் தயாராக இருக்கிறார்கள் என்றும் அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படும் சாத்தியமும் உள்ளது என்றும் பெர்லிஸ் பெர்சத்து கூறிக்கொண்டது.

அதன் செயலாளர் வான் சைபுல் வான் ஜான், அம்மாநிலத்தின் அம்னோ தலைவர்கள் பலரைச் சந்தித்ததாகவும் அவர்கள் கட்சியைவிட்டு வெளியேறுவதற்கு தயாராக உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

“அவர்கள் விரைவில் பெர்சத்துவில் சேர்வார்கள். ஆனால், அவர்களின் பெயர்களை இப்போதைக்கு வெளியிட முடியாது. அவர்களை ஏற்க நாங்களும் தயாராக இருக்கிறோம்”, என்றாரவர்.

கிடைத்த தகவல்கள் மற்றும் மக்களின் மனநிலையை வைத்துப் பார்க்கையில் அவர்கள் ஒரு மாற்றத்தைக் காண விரும்புகிறார்கள் என்றும் ஆனால் மாநில அம்னோ அரசு அதைச் செய்யத் தவறிவிட்டது என்றும் அவர் சொன்னார்.

மந்திரி புசார் அஸ்லான் மான் அம்னோ உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஊட்டத் தவறிவிட்டார் அதனால் அவருக்குப் பெரும்பான்மையோர் ஆதரவு இல்லை என்றார்.

“காகிதத்தில் மட்டுமே அவர் எம்பி(மந்திரி புசார்). பெர்லிசை மேம்படுத்தவும் மாநிலப் பொருளாதாரத்தைப் பெருக்கவுமான திட்டங்கள் எங்கே?”, என்று வான் சைபுல் வினவினார்.

பெர்லிஸ் சட்டமன்றத்தில் எண்மர் அம்னோ கட்சியினர், ஒருவர் மசீச, இருவர் பாஸ் கட்சியினர் மூவர் பிகேஆரைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சுயேச்சை.