பிடி இடைத் தேர்தலை பிஎன் புறக்கணிக்கிறது

 

எதிர்வரும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலைப் புறக்கணிக்க பிஎன் முடிவு செய்துள்ளது, ஏனென்றால் அது அரசாங்கப் பணத்தை வீணாக்குவதாகும் என்று பிஎன் தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடி கூறுகிறார்.

இன்று மதியம், கோலாலம்பூரில் அம்னோ அரசியல் பிரிவின் கூட்டத்திற்குத் தலைமை ஏற்ற பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

பிஎன் பங்காளிகளான மசீச மற்றும் மஇகா ஆகியவற்றுடன் கலந்தாலோசித்தப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட பொதுவான முடிவு இது என்று அவர் கூறினார்.

அரசாங்கம் நாட்டில் நிதிப் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளதைக் கவனத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

இந்த இடைத் தேர்தலை நடத்துவதற்கு ரிம3.6 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தப் பணத்தை வேறு நல்ல நோக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்றாரவர்.

ஒரு நபர் அவரின் தனிப்பட்ட இலட்சியத்தை அடைவதற்காக திட்டமிட்டு கொண்டுவரப்பட்டுள்ள இந்த இடைத் தேர்தலில் அம்னோ பங்கேற்க விரும்பவில்லை என்று ஸாகிட் விளக்கம் அளித்தார்.

ஓர் இடைத் தேர்தலை அம்னோ புறக்கணித்தது இது முதல் தடவை அல்ல. மே 31, 2009 ஆம் ஆண்டில் நடந்த பெனாந்தி இடைத் தேர்தலிலும் இதே காரணத்திற்காக அம்னோ பங்கேற்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

இந்த இடைத் தேர்தலில் பாஸ் ஒரு வேட்பாளரை நிறுத்தினால் பிஎன் ஆதரவு அளிக்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.