அரசியல் இலாபத்திற்காக இன-சமய விவகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது: பொன்.வேதமூர்த்தி

“அரசியல் இலாபத்திற்காக இன, சமய விவகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன; இத்தகையப் போக்கை அரசியல் தலைவர்கள் இனியும் தொடர்வது நாட்டிற்கு நல்லதல்ல” என்று பிரதமர் துறை அமைச்சர்  பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

 மலேசிய தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் சார்பில் செப்.22 சனிக்கிழமை கொண்டாடப்பட்ட பன்னாட்டு அமைதி தின விழாவில் உரையாற்றியபோது பேசிய அவர், கடந்த 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரு முறை நடைபெற்ற உலகப் போரால் கோடிக்கணக்கான அப்பாவி மக்கள் மடிய நேர்ந்தது. அதன்பின், உலக நாடுகளிடையே ஒற்றுமையையும் அமைதியையும் நிலைநாட்ட தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் உலக ஒற்றுமை தினத்திற்கு அடித்தளம் அமைக்கப் பட்டது.

 1961-ஆம் ஆண்டில் ஐநா மன்றத்தின் அப்போதைய பொதுச் செயலாளர் ஹொமர் சீல்ட் என்னும் மனித நேயர், உலக அமைதி தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தவேளையில் விமான விபத்தில் பலியானார். செப்டம்பர் மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை அவர் மறைந்த தினத்தின் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் மூன்றாவது செவ்வாய்க் கிழமை அனுசரிக்கப்பட்ட உலக அமைதி நாள், பின்னர் செப்டம்பர் 21-ஆம் நாள் பன்னாட்டு அளவில் கொண்டாடப்படுகிறது.

 1948-ஆம் ஆண்டில் பாரிஸ் பெரு நகரத்தில் கூடிய ஐநா பொதுப் பேரவையில்தான் உலக அமைதி நாளுக்கான பிரகடனம் முன்மொழியப்பட்டது. அப்போது உலகாளவிய நிலையில் சமூக-பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டாலன்றி உலக அமைதி என்பது சாத்தியமில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது; அத்துடன் சக வாழ்வும் சம உரிமையும்தான் உலக மாந்தரிடையே அமைதியை நிலைநாட்டுவதற்கான திறவுகோல் என்றும் குறிப்பிட்டனர். உலக வரலாற்றில் ஒரு மைல் கல் என வருணிக்கப்படும் பன்னாட்டு அமைதி சாசனம், 500 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய பெருமை இந்த ஒரு சாசனத்திற்கு மட்டுமே உண்டு.

 இதன்தொடர்பில் அறிவியல் அறிஞர் அல்பர்ட் ஐன்ஸ்டைன் கூட, “போர்மேகம் என்பது போர்முனையில் தோன்றுவதல்ல; அதற்கு முன்பே அது மனித மனங்களில்தான் தோன்றுகிறது. எனவே, மக்களின் மனதிலும் மக்களை ஆளும் தலைவர்களின் மனதிலும் அமைதி தவழ்ந்தால்தான் அது உலக அளவில் பிரதிபலிக்கும்” என்று குறிப்பிட்டதை உலகம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

 சுதந்திரம், சமத்துவம், தனிச்சிறப்பு, சகோதரத்துவம் ஆகியவை இந்த உலகில் தோன்றும் அனைத்து மனிதருக்கும் சொந்தம் என்பதை ஐநா அமைதிப் பிரகடனத்தின் முதல் சரத்து வலியுறுத்துகிறது. அத்துடன், சகவாழ்வும் சம உரிமையும் இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உரியதென்று மூன்றாவது பிரிவு சொல்கிறது.

அதைப்போல, மலேசிய மக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்னும் பெருமையை மலேசிய அரசியல் சாசனத்தின் 8-ஆவது பிரிவு நமக்கெல்லாம் வழங்குகிறது; அனைவருக்கும் சமமான சட்டப் பாதுகாப்பையும் அது அளிக்கிறது. மலேசியர் அனைவருக்கும் சம உரிமை, சமய சுதந்திரம், பேச்சுரிமை, கூட்டாக செயல்படுவது உள்ளிட்ட உரிமைகளையும் அரசியல் சாசனம் நமக்கு வழங்குகிறது. இதன் அடிப்படையில்தான் மலேசியக் கூட்டு சமுதாயம் பார் போற்றும் விதமாக சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

இப்படிப்பட்ட நாட்டில் வாழ்வது நமக்கெல்லாம் பெருமை என்றாலும் சில வேளைகளில் இன-சமய முறுகல் நிலை தோன்றுவதை நாம் காண்கிறோம். இதற்கு ஒரு சில அரசியல் கட்சிகளும் சுய நலத்தை மட்டும் விரும்பும் சில அரசியல்வாதிகளும்தான் காரணம். ஆனாலும், இவற்றையெல்லாம் வென்றுதான் நாம் அமைதியான சூழலை இந்த மண்ணில் நிலைநாட்டி வருகிறோம். அமைதி தவழும் பூங்காவாக இந்த நாட்டை விளங்கச் செய்வதில் ஒவ்வொரு மலேசியருக்கும் பங்குண்டு.

இந்த ஆண்டில் 70-ஆவது பன்னாட்டு அமைதி நாள் அனுசரிக்கப்படும் வேளையில் போற்றுதலுக்குரிய அன்னை மங்கலம் அம்மாள் வழிநடத்தும் தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலக அமைதி நாள் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடையும் அதேவேளை அரசின் சார்பில் பாராட்டையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட தேசிய ஒற்றுமை-சமூக நல அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் கடப்பாட்டையும்  பாராட்டினார்.

நிறைவாக, வரும் ஆண்டுகளில் மலேசிய அரசின் சார்பில் செப்டம்பர் 21-ஆம் நாளை உலக சமாதான நாளாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மான நகலை ‘அமைதியான மலேசியாவிற்கான கூட்டாளிகள்’(Partners For Peace Malaysia) என்னும் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஜோசஃப் லொவ் அமைச்சரிடம் வழங்கினார். ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நாட்டுப் பற்றும் உலகளாவிய பார்வையும் வெளிப்பட்டன.

– நக்கீரன்