முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் துணையார் ரோஸ்மா மன்சோர் மீதான மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புலன்விசாரணை முடிவடைந்து விட்டது. அதன் அறிக்கை சட்டத்துறைத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த நடவடிக்கை அவர் கையில் என்று எம்எசிசியின் தலைமை ஆணையர் முகமட் சூக்ரி அப்துல் கூறினார்.
விசாரணை செய்வது மட்டுமே எம்எசிசியின் பொறுப்பாகும். ரோஸ்மா மீது வழக்குத் தொடர்வதா இல்லையா என்பது சட்டத்துறை தலைவரைப் பொறுத்தது என்று அவர் கூறினார்.
இதற்கு முன்னதாக, ரோஸ்மா 20க்கும் மேற்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவிருக்கிறார் என்று ஊடகச் செய்திகள் கூறின.
கடந்த ஜூன் மாதத்தில் ரோஸ்மா அவருடைய வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக எம்எசிசியின் புத்ரா ஜெயா தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
செப்டெம்பர் 20 இல், ரோஸ்மா மீது விரைவில் குற்றம் சாட்டப்படும் சாத்தியத்தை எம்எசிசி மறுக்கவில்லை என்ற செய்தியும் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், சூக்ரி மேற்கொண்டு கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.