பிகேஆர் மத்திய தலைமைத்துவ மன்றத்துக்குப் போட்டியிடும் ஒரு வேட்பாளர் தன்னுடைய அரசியல் செயலாளர் பதவியைப் பயன்படுத்தி குத்தகைகள் கொடுப்பதாகவும் அரசாங்க ஒதுக்கீடுகள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் பகாங்கில் உள்ள கட்சித் தலைவர்களிடம் பேரம் பேசினாராம்.
இவ்வாறு குற்றஞ்சாட்டும் பிகேஆர் இளைஞர் ஒருங்கிணைப்பாளர் அஹ்மட் ஷ்க்ரி சே அப் ரசாக், சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக இன்று காலை புத்ரா ஜெயா எம்ஏசிசி-இல் புகார் செய்தார். அந்நபர் தொகுதித் தலைவர் பதவிக்கும் போட்டி இடுவதாக அவர் சொன்னார்.
அவ்வேட்பாளர் செப்டம்பர் முதல் தேதி உள்ளூர் தலைவர்களைச் சந்திக்கும் ஒரு கூட்டத்தில் ரிம20,000 பெறுமதியுள்ள குத்தகைகளைக் கொடுப்பதாகவும் ரிம300,000 வரையிலான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுத் தருவதாகவும் கூறிக்கொண்டாராம்.
“அவருக்குச் சாதகமாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே இவற்றையெல்லாம் கொடுப்பதாக அவர் சொன்னார் என்று நான் நம்புகிறேன்”, என அஹ்மட் ஷுக்ரி கூறினார்.
ஆனால், அந்த வேட்பாளர் யார் என்பதையோ அவர் எந்த அமைச்சில் உள்ளார் என்பதையோ அவர் தெரிவிக்கவில்லை.