தலைமறைவாக உள்ள தொழிலதிபர் ஜோ லோ “ஆபத்துகளைச் சந்திக்கத் தயங்காதவர்” என்றும் “ஒரு மாறுபட்ட மனிதர்” என்றும் ‘பில்லியன் டாலர் வேல்’ நூலின் இணை- எழுத்தாளர் டோம் ரைட் கூறினார்.
“உங்களைப் போன்றோ என்னைப் போன்றோ ஒரு சராசரி மனிதர் அல்லர் அவர்”, என்று ரைட் இன்று காலை பிஎப்எம் வானொலி நிலையத்திடம் கூறினார்.
1எம்டிபி-இல் அவர் சம்பந்தப்பட்ட விவகாரம் அம்பலமாகி அமெரிக்க நீதித்துறை வழக்குகளில் அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டபோதுகூட அவர் அடங்கிப்போகவில்லை.
2015இல் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரை நாட்டைவிட்டுத் “துரத்திய” போதுகூட அவர் சும்மா இருக்க வில்லை. சீனாவுடன் புதிய தொழில் உடன்பாடுகள் செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார்.
“பட்டது போதும் என்று இருந்து விடுவதில்லை. இப்போதும்கூட மலேசியாவின் புதிய அரசாங்கத்துக்கு, ‘உங்களுக்கு என்னால் உதவ முடியும் (எடுத்துக்காட்டுக்கு) இவ்வாரம் நியு யோர்கில் மகாதிரின் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய முடியும் அல்லது சொத்துக்களைத் திரும்பப் பெற உங்களுக்கு என்னால் உதவ முடியும். என்னைச் சேர்த்துக்கொள்ளாவிட்டால் உங்களால் அந்தச் சொத்துக்களைத் திரும்பப் பெற முடியாது’ என்று குறுஞ் செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
“பெரும்பாலோர் போதுமென்று சரணடைந்திருப்பார்கள்”, என்று ரைட் கூறினார். ரைட் வால் ஸ்திரிட் ஜர்னல் நாளேட்டின் செய்தியாளர்.