பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கட்சித் தேர்தலைக் கண்காணிக்கும் பொறுப்பை பெர்சேயிடம் ஒப்படைக்கலாம் என்ற பரிந்துரையை வரவேற்கிறார். ஆனால், தேர்தல் தொடங்கி நடந்து கொண்டிருக்கும் வேளையில் அதைச் செய்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறார்.
“பரிந்துரையைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நடைமுறைப்படுத்துவது சிரமம். ஏனென்றால் தேர்தல் ஏற்கனவே தொடங்கி விட்டது.
“இதை மேலும் தாமதப்படுத்த முடியாது. சங்கப் பதிவக (ஆர்ஓஎஸ்) உத்தரவு அப்படி”, என்றாரவர்.
மின் வாக்களிப்பு முறையால் கடந்த சனிக்கிழமை முதல்நாள் வாக்களிப்பின்போது பிரச்னைகள் உண்டானதை அடுத்து பெர்சே-இடம் கண்காணிப்புப் பணியை ஒப்படைக்க வேண்டும் என்று எழுந்த கோரிக்கைகளுக்கு அன்வார் எதிர்வினை ஆற்றினார்.
அம்முறை பினாங்கில் ஒழுங்காக வேலை செய்தது. ஆனால், கெடாவில் தகராறு செய்தது.
அதில் உள்ள பலவீனங்களைச் சரிசெய்ய பல மாநிலங்களில் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன.