பிடி இடைத்தேர்தலில் பாஸ் வேட்பாளர், விரைவில் முடிவு செய்யப்படும்

போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில், தனது வேட்பாளரை நிறுத்தலாமா , வேண்டாமா என்பதைப் பாஸ் விரைவில் முடிவு செய்யும் என அக்கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் இன்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“இன்னும் ஓரிரு நாளில், கட்சி இதுகுறித்து கலந்துபேசும், அதன்பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்,” என்றார் அவர்.

முன்னதாக, அன்வார் போட்டியிட்டு, நாடாளுமன்றத்திற்குள் நுழைய வழிவகுக்கும் வகையில், டான்யால் பாலகோபால் அப்துல்லா போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இருக்கையைக் காலிசெய்தார்.

பி.ஆர்.எம். , சுயேட்சை வேட்பாளர்கள் அன்வாருக்கு சவால்

இதுவரை, மலேசிய மக்கள் கட்சி (பி.ஆர்.எம்.) மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் மட்டுமே அன்வாரை எதிர்த்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள வேளை, பி.என். இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது.

பி.என்.-னின் இந்த முடிவைத் தொடர்ந்து, மக்களின் பார்வை பாஸ் கட்சியின் பக்கம் திரும்பியுள்ளது. காரணம், அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அன்வார் சுலபமாக வெற்றிபெற, பாஸ் வழிவிடாது என வலியுறுத்தியுள்ளார்.

அதேசமயம், அக்கட்சியின் உதவித் தலைவர், முகமட் அமார் நிக் அப்துல்லா, ‘தனிநபர் ஒருவரின் சுயவிருப்பத்தை நிறைவுசெய்ய, வேண்டுமென்றே நடத்தப்படும் இடைத்தேர்தல்’ என்பதால், இதில் பாஸ் ஈடுபடக்கூடாது என நேற்று கூறியிருந்தார்.

போர்ட்டிக்சன் இடைத்தேர்தலை, எதிர்வரும் அக்டோபர் 13-ம் தேதி நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் ஓத்மான் மஹ்மூட், செப்டம்பர் 29-ல் வேட்புமனு தாக்கலும், அக்டோபர் 9-ம் தேதி ஆரம்ப வாக்களிப்பும் நடைபெறும் என்று தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்திற்கு 14 நாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.