ஹரப்பான் ஊராட்சிமன்ற உறுப்பினர் சீன மொழியில் எழுதிய கடிதம் ஜோகூர் சுல்தானை சினமடையச் செய்துள்ளது

அவரது வேலையைச் செய்யத் தெரியாவிட்டால் அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் ஊராட்சிமன்ற உறுப்பினரை ஜோகூர் சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.

இஸ்கந்தர் புத்ரி மாநகர் மன்ற உறுப்பினர் சான் வெய் கெஜான் அம்மன்றத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தாளில் சீனமொழியில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தார்.

அந்த மன்ற உறுப்பினருக்கு அவரது வேலையை எப்படிச் செய்வது என்று தெரியாவிட்டால், அவர் இராஜினாமா செய்ய வேண்டும். இது எனது எச்சரிக்கை…இந்தத் தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்று ஆட்சியாளர் அவரது முகநூலில் இன்று பதிவு செய்துள்ளார்.

மாநில அரசு அல்லது ஊராட்சிமன்றங்கள் சம்பந்தப்பட்ட கடிதங்களில் தேசியமொழி பயன்படுத்தப்பட வேண்டும் என்று சுல்தான் இப்ராகிம் கூறுகிறார்.

சான் கையொப்பமிட்டுள்ள அக்கடிதம் அங்கு வாழும் மக்களை பெர்லிங் சட்டமன்ற உறுப்பினர் சியோ யீ ஹவ்வுடன் நடத்தப்படும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பாகும்.

சுல்தான் அவரது எச்சரிகையை விடுப்பதற்கு முன், தவறு ஏதும் இழைக்கப்பட்டிருந்தால் அதற்காக சான் மன்னிப்பு கோரியுள்ளார்.

அக்கடிதம் உண்மையில் தேசியமொழியில் எழுதப்பட்டிருக்கிறது. அத்துடன் அதன் சீன மற்றும் ஆங்கில மொழியாக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று சான் கூறினார்.

மாநிலத்தில் அதிகாரப்பூர்வமான கடிதங்கள் பன்மொழிகளில் இருந்ததே இல்லை. நாம் எந்த அதிகாரப்பூர்வமான கடிதங்களையும் இரு மொழிகளில் எழுதியதேயில்லை என்று சுல்தான் கூறினார்.