உள்ளூர் வாசிகளின் உடல் நலத்தைப் பாதிக்கவல்ல அ ந்நிய நாட்டுப் பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி நடவடிக்கைகளையும் நிறுவனங்களையும் உடனடியாக நிறுத்துவது அல்லது மூடுவது உட்படக் கடும் அமலாக்க நடவடிக்கைகள் எடுக்க கோல லங்காட் மாவட்ட மன்றத்தைக் கடந்த மாதம் வற்புறுத்தியதோடு இவ்வட்டாரத்தில் பல நிறுவனங்கள் பொதுமக்கள் உடல் நலனுக்குப் பாதகமான பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதையும் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கண்டித்தார்.
சட்டத்தை மதிக்காத இது போன்ற நிறுவனங்களின் செயல் உள்ளூர் அமலாக்க அதிகாரிகள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்வதில்லை அல்லது அந்தப் பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி நிறுவனங்களில் அவர்களும் பங்காளிகள் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது.
இது போன்ற செயல்களால், கழிவுகளின் தொட்டில் என நாடு கேவலப்படுத்தப்படுகிறது. .அந்நிய ஊடகங்கள் நமது நாட்டைக் கேவலமாகச் சித்தரிப்பது, பிளாஸ்டிக் கழிவுகளால் நம் மக்களின் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் செயல் என்பதைக் கவனத்தில் கொண்டு அமலாக்க இலாகா அக்கறையுடன் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றார்.
தொகுதி மக்களின் புகார்களிலிருந்து, தெனாக போன்ற அரசாங்க நிறுவனங்களின் செயல்களும் கேள்விக்குறியாக இருப்பதைக் காட்டுகிறது. பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட எப்படி அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.
பொறுப்பற்ற இச்செயல்கள் மீது கடுமையாக நடந்து கொள்ளாத மாநிலச் சுற்றுச்சூழல் இலாகா மற்றும் கோல லங்காட் மாவட்ட மன்றத்தின் செயலால், இப்பகுதி மட்டுமில்லாமல் மலேசியாவே பிளாஸ்டிக் கழிவு குப்பைத் தொட்டியாக வெளி நாட்டு ஊடகங்கள் சித்தரிக்க இடமளித்து விட்டது.
கோல லங்காட் மாவட்ட மன்றம் மற்றும் எல்லா அமலாக்கப் பிரிவுகளையும் இது போன்ற சட்டவிரோதப் பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி நிறுவனங்கள் மீது எந்தத் தயக்கமோ தயவோ இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என்றார் நீர், நிலம் இயற்கை வள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்..