ஜொகூரில் தடுப்புக்காவல் கைதி மரணம், விசாரணை நடத்த குடும்பத்தார் கோரிக்கை

நேற்று, ஜொகூரில், போலிஸ் காவலில் மரணமுற்ற ஒருவரின் குடும்பத்தார், அவரின் மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 18-ல், போதைப் பொருளில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட முகமட் ஃபைசால் முகமட் யேய்ட், 32, நேற்று, பத்து பஹாட் லாக்கப்பில் இறந்துகிடந்தார்.

‘கேஸ்ட்ரிக்’ நோயால் குடலில் வெடிப்பு ஏற்பட்டு, அவர் இறந்ததாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, ஃபைசாலின் அண்ணன் முகமட் யாஸிட், மலேசியகினியிடம் கூறினார்.

இருப்பினும், ஃபைசாலின் வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் வீக்கம் இருந்ததைத் தன் உடன்பிறப்புகள் கண்டதாக யாஸிட் தெரிவித்தார்.

“அவர் மரணத்திற்கான காரணத்தில் எங்களுக்குத் திருப்தி இல்லை. முழு அறிக்கை இன்னும் வெளியே வரவில்லை.

“ஆனால், முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையில் கெஸ்ட்ரிக் முற்றி போனதால், குடல் வெடித்துவிட்டது என டாக்டர் எழுதியுள்ளார்.

“ஆனால், இறுதி சடங்கின்போது என் தம்பி, ஃபைசாலின் உடலில் காயங்கள் இருந்ததைப் பார்த்துள்ளார்,” எனத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது யாஸிட் தெரிவித்தார்.

போலிஸ்சைக் குற்றம் சொல்லவில்லை, சந்தேகம் மட்டுமே

யொங் பெங்கில் கைது செய்யப்பட்ட நான்கு நாள்களுக்குப் பின்னரே, ஃபைசாலின் மனைவியிடம் போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர், இது தங்களுக்கு வருத்தத்தை அளித்ததாகவும் யாஸிட் சொன்னார்.

நேற்றிரவு, குளுவாங், பாலோவில் அடக்கம் செய்யப்பட்ட ஃபைசாலுக்கு மனைவியும், ஒரு வயதே ஆன மகனும் உள்ளனர்.

நாளை, ஃபைசாலின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென, தன் குடும்பத்தார் போலிசில் புகார் செய்ய உள்ளதாகவும் யாஸிட் மேலும் கூறினார்.

“நாளை போலிஸ் புகார் செய்யலாம் என எண்ணியுள்ளோம். போலிசை நாங்கள் குற்றம் சொல்லவில்லை, ஆனால் அவர் மரணத்தில் எங்களுக்குச் சந்தேகம்,” என்றார் அவர்.

ஜொகூர் மாநிலப் போலிஸ் தலைவர், முகமட் காலில் காடிர் முகமட், “அக்குடும்பத்திற்குப் புகார் செய்யும் உரிமை உண்டு, அவர்கள் புகார் செய்தால், விசாரணையை மேற்கொள்வதில் எங்களுக்குப் பிரச்சனை இல்லை,” என மலேசியாகினி தொடர்புகொண்டபோது கூறினார்.

கடந்த செப்டம்பர் 18-ல், ஃபைசால் அபாயகரப் போதைப் பொருள் சட்டம் 12 (2) கீழ், போதைப் பொருள் வைத்திருந்தார் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு, செப்டம்பர் 22-ல், ஃபைசாலைத் தடுப்புக் காவலில் வைக்க, போலிசார் நான்கு நாள்கள் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.

மாஜிஸ்திரேட் லாக்காப்பிற்குச் சென்று சோதனை செய்தார்

“செப்டம்பர் 23-ல், மரணமடைந்தவர் வயிறு வலிப்பதாகத் தெரிவிக்கவே, பத்து பஹாட், சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

“மறுநாள் காலை, 10 மணியளவில், அவர் சுயநினைவின்றி ‘செல்’லில் கிடந்ததைக் கண்ட போலிசார், ஆம்புலன்சை அழைத்தனர். ஆனால், மருத்துவ உதவியாளர் ஒருவர், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்,” என்றார் அவர்.

அதனைத் தொடர்ந்து, போலிசார் பத்து பஹாட் மாஜிஸ்திரேட்டை அழைத்ததாகவும், அவர் லாக்கப்பிற்கு வந்து, மரணமடைந்தவர் உடலைப் பரிசோதித்ததாகவும் காலில் தெரிவித்தார்.

அவர் மரணத்தில் மோசடி ஏதும் இல்லை என மாஜிஸ்திரேட் தெரிவித்ததாகவும் அவர் சொன்னார்.

“அன்று மாலை நடந்த பிரேதப் பரிசோதனையில், அவர் இறந்ததற்கு வயிற்றில் ஏற்பட்ட குடல் வெடிப்பே காரணம் என டாக்டர் தெரிவித்தார்,” என்றார் அவர்.