நஜிப்: 21 குற்றச்சாட்டுகள் என்பதால் இனி, 1எம்டிபி பற்றி வெளியில் பேச முடியாது

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமக்கு எதிராக 21 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதால் 1எம்டிபி குறித்து இனி சுதந்திரமாக பேச முடியாது என்கிறார்.

பொது நிகழ்வுகளில் அது குறித்துப் பேசுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற அரச தரப்பு கேட்டுக்கொண்டதை கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் நிராகரித்து விட்டாலும் அது இன்னமும் ஒரு நீதிமன்ற விவகாரம்தான் என்று நஜிப் தெரிவித்தார்.

“நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதால் 1எம்டிபி குறித்து நீதிமன்றத்துக்கு வெளியில் என்னால் சுதந்திரமாகக் கருத்துரைத்தவோ விளக்கவோ இயலாது”, என்றவர் முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிமன்றத்திலே வழக்காடி தம்மீதான களங்கத்தைப் போக்கிக்கொள்ளப் போவதாகவும் அவர் கூறினார்.

“உண்மையை நிலைநிறுத்தும் நீதித்துறை என்பதால், ஆண்டுக்கணக்கில் இழுத்துக்கொண்டே போகும் இந்த ரிம2.6 பில்லியன் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இது ஒரு அருமையான வாய்ப்பு என்று நம்புகிறேன்”, என்றாரவர்.