பி.டி-இல் களமிறங்குவது குறித்து பாஸ் இன்றிரவு விவாதிக்கும்

போர்ட் டிக்சனில் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக போட்டிப்போடாமல் அம்னோ விலகிக் கொண்டிருப்பதால் அந்த இடத்தில் களமிறங்குவது குறித்து முடிவெடுக்க பாஸ் தலைவர்கள் இன்றிரவு கோலா திரெங்கானுவில் ஒன்றுகூடுகிறார்கள்.

பாஸ் தலைமைத்துவக் கூட்டம் நடக்கவிருப்பதை திரெங்கானு மந்திரி புசார் அஹமட் சம்சூரி மொக்தார் நேற்றிரவு உறுதிப்படுத்தினார். ஆனால், அங்கு பாஸ் போட்டியிடுவதை அவர் விரும்புகிறாரா இல்லையா என்ற கேள்விக்குப் பதிலளிக்கத் தயங்கினார்.

பாஸ் கட்சியில் தேர்தல் இயக்குனரான சம்சூரி, அந்த இடைத் தேர்தலில் பாஸ் போட்டியிடுவதற்குப் பல காரணங்கள் உண்டு, அதேபோல் போட்டியிடாமல் இருப்பதற்கும் காரணங்கள் உண்டு என்றார்.

“ஆனால், இது ஒருவர் மட்டுமே முடிவு செய்யும் விவகாரம் அல்ல. கூட்டம் கூடித்தான் முடிவு செய்ய வேண்டும். நான் முந்திக்கொண்டு எதையும் சொல்ல விரும்பவில்லை” , என்றார்.

கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டமொன்றில் அறிவிக்கப்படும் என்றாரவர்.