ஆறு மணி நேரம் கடந்தும், முன்னாள் பிரதமர் நஜிப்பின் மனைவி, ரோஸ்மா மன்சோர், புத்ராஜெயா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி) தலைமையகத்திலிருந்து வெளியேறவில்லை.
கடந்த மூன்று மாதத்தில், இரண்டாம் முறையாக சாட்சியம் அளிக்க வந்த ரொஸ்மாவுடன் அவரின் வழக்கறிஞர் கே குமரேந்திரன் இருந்தார்.
இன்று காலை 9.50 மணியளவில், எம்.ஏ.சி.சி. அலுவலகம் வந்த ரொஸ்மா அமைதியாகவே காணப்பட்டார்.
பல உள்ளூர், வெளியூர் ஊடகவியலாளர்கள், காலை மணி 6.30 தொடக்கமே எம்.ஏ.சி.சி. அலுவலக வளாகத்தில் குவியத் தொடங்கிவிட்டனர். ரொஸ்மா அங்கிருந்த எம்.ஏ.சி.சி. அதிகாரிகளிடம் புன்னகையுடன் உரையாடினார்.
ரொஸ்மா இன்று கைதுசெய்யப்பட்டு, நாளை குற்றம் சாட்டப்படலாம் என பல ஆருடங்கள் இருந்த வேளை, அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என வழக்கறிஞர் குமரேந்திரன் தெரிவித்தார்.
இருப்பினும், அது உண்மையல்ல என எம்.ஏ.சி.சி. துணை ஆணையர் அஸாம் பாக்கி மலேசியாகினியிடன் தெளிவுபடுத்தினார்.
கடந்த ஜூன் 5-ம் தேதி, 1எம்டிபி மற்றும் எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் சென். பெர். நிறுவனம் தொடர்பில், எம்.ஏ.சி.சி. ரொஸ்மாவை 5 மணி நேரம் விசாரணை செய்தது.
நேற்று, எம்.ஏ.சி.சி. அதிகாரி, தாமான் டூத்தாவில் இருக்கும் ரொஸ்மா வீட்டிற்குச் சென்று, அதே வழக்கு தொடர்பில் விசாரிக்க வேண்டுமென நோட்டிஸ் வழங்கியுள்ளார்.
முன்னதாக, ரொஸ்மா 20 குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கலாம் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.