சி.ஐ.எம்.பி. குரூப் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் தலைமை பதவியை, நஸீர் ரஷாக் இராஜினாமா செய்யக்கூடாது என, வங்கி தொழிலாளர்களின் தேசியத் தொழிற்சங்கம் (என்.யு.பி.இ.) கேட்டுக்கொண்டுள்ளது.
இத்துறையில், அவரைப் போன்று திறமையானவர்கள் யாரும் இல்லை, எனவே, அவர் பதவி விலகினால் அது வங்கித் துறைக்கு ஒரு பேரிழப்பு என என்.யு.பி.இ. தலைமைச் செயலார் ஜே சோலமன் கூறியுள்ளார்.
“அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டு, மலேசிய வங்கி தொழில்துறையில் அவரின் நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் தொடர்ந்து பகிர்ந்துகொள்ள வேண்டும்,” என்றார் அவர்.
2018 டிசம்பர் 31-ல், சி.ஐ.எம்.பி. குழுமத்தில் தான் வகித்துவரும், தலைவர் பதவி உட்பட, அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்யப்போவதாக, நஸிர் நேற்று அறிவித்தார்.
கடந்த 1989 முதல், சி.ஐ.எம்.பி.-யில் பணியாற்றிவரும், முன்னாள் பிரதமரின் தம்பியுமான நஸீர், 2014 முதல் அக்குழுமத்தின் தலைமை பொறுப்பை வகித்து வருகிறார்.
கடந்த மே 9-ல், பி.என். அரசாங்கத்தைத் தன் அண்ணன் தற்காக்கத் தவறியதும், நஸீர் பதவி விலக ஒரு காரணம் என பரவலாகப் பேசப்படுகிறது.