சமயப் பணியுடன் சமூகப் பணியும் ஆற்ற வேண்டும், வேதமூர்த்தி

ஆலயங்களை நிருவகிக்கும் பொறுப்பாளர்கள், தாங்கள் ஆற்றும் ஆன்மிகப் பணியுடன் சமுதாயப் பணியையும் இணைத்துக் கொண்டால், அது நலிந்த நிலையில் இருக்கும் மக்கள் மீட்சிபெற துணையாக அமையும் என்று பொன்.வேதமூர்த்தி டெங்கில், கம்போங் அம்பர் தெனாங் அருள்மிகு மயூர நாதர் ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உரையாற்றியபோது குறிப்பிட்டார்.

“ஹிண்ட்ராஃப் போராட்ட பயணத்தில் இந்த ஆலயம் மிகவும் குறிப்பிடத் தக்கது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் துணை அமைச்சர் பதவியில் இருந்து நான் விலகியபோது, என்னை முதன்முதலாக அழைத்து, பாராட்டி தொடர்ந்து இந்திய சமுதாயத்திற்கு சேவையாற்றும்படி ஊக்கப்படுத்தியவர்கள் இந்த ஆலய நிருவாகத்தினர்..

தொண்டு மனப்பான்மை உள்ளவர்கள் ஒதுங்கி நிற்காமல் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். இதன் அடிப்படையில்தான் ஹிண்ட்ராஃப் என்னும் பெயரில் சமூக இயக்கமாக செயல்பட்ட நாம், தற்பொழுது மலேசிய முற்போக்குக் கட்சி என்னும் பெயரில் அரசியல்  உருமாற்றம் அடைகிறோம். அத்துடன், இந்திய சமுதாயத்தை நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தில் பிரதிநிதிக்கவும் தேர்தல் களத்தை எதிர்கொள்ளவும் இது அவசியமாகிறது.

போராட்டக் களம் போதும்; நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியின்வழி இனி மக்களுக்கு சேவையாற்றுவோம். எனவே, நல்லவர்கள் புதிய கட்சியில் இணைந்து எதிர்கால இந்திய சமுதாயம் முன்னேற துணை நிற்க வேண்டும் என்று ஆலயப் பொறுப்பாளர்களும் டிங்கில் ஹிண்ட்ராஃப் இயக்கத்தினரும் இணைந்து ஆலயத்தில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசியபோது பிரதமர் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

-நக்கீரன்