தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டிற்கு பொறுப்பு வகிக்கும் பிரதமர் துறை அமைச்சர் ‘செனட்டர்’ பொன்.வேதமூர்த்தி மிகுந்த பரிவும் நலிந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அக்கறையும் கொண்டவர் என்று கெடா, பெண்டாங் வட்டாரத்தில் உள்ள லம்பம் தோட்டத்தில் பூர்வீகமாக வசிக்கும் சயாம் இன மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
லம்பம் தோட்டத்தில் வசிக்கும் சயாமிய மக்கள் சார்பில் செப்டம்பர் 25-இல் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக நலக் கூட்டத்தில் மத்தியக் கூட்டரசின் சார்பில் கலந்து கொண்ட வேதமூர்த்தி, அந்த மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கையையும் பெற்றுக் கொண்டார்.
அப்போது, ‘தங்களின் பிள்ளைகள் தாய்மொழியைக் கற்க சயாம் மொழி ஆரம்பப் பள்ளி வேண்டும்; அடையாள ஆவணப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்; நீண்ட கால நிலப் பிரச்சினை இன்னும் தொடர்கிறது; சமய நடவடிக்கைக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும்; உயர்க்கல்வி நிலையங்களில் மலேசிய-சயாமிய மாணவர்களுக்கு போதுமான இடம் கிடைப்பதில்லை; தாங்கள் பூமிபுத்ரா என்று வகைப்படுத்தப்பட்டாலும் அதற்கான அனுகூலம் ஏதும் கிடைப்பதில்லை; எங்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல கெடா மாநில சட்டமன்றத்தில் சயாமிய மக்கள் பிரதிநிதி வேண்டும்’ என்றெல்லாம் அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சயாமிய குடிமக்கள், இதுவரை எந்த அமைச்சரும் தங்களைத் தேடி வந்து இத்துணைப் பரிவுடன் நடந்து கொண்டதில்லை; எங்களின் பிரச்சினை குறித்து இந்த அளவுக்கு கேட்டறிந்ததும் இல்லை என்றவர்கள், புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு நன்றியையும் புலப்படுத்தினர்.