பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அம்னோவுக்கு -எந்தக் கட்சிக்கு 22 ஆண்டுகள் தலைவராக இருந்தாரோ அந்தக் கட்சிக்கு- அழிவு நிச்சயம் என்று ஆருடம் கூறியுள்ளார்.
“இப்போது அம்னோ துண்டுதுண்டாக உடைந்து கிடக்கிறது, அது அழியப்போவது உறுதி. அம்னோவுக்கு இனி எதிர்காலம் இல்லை. ஏனென்றால் மக்கள் அம்னோவை வெறுக்கிறார்கள்.
“அதனால்தான் அவர்கள் (அண்மைய பொதுத் தேர்தலில்) எதிரணியை வலுவாக ஆதரித்தார்கள்”, என்று மகாதிர் தெரிவித்ததாக த ஸ்டார் ஆன்லைன் கூறிற்று.
ஐநா பொதுப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நியு யோர்க் சென்றுள்ள மகாதிர் அங்கு அமெரிக்க வெளியுறவு மன்றம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்ற கட்சிகளுடன் புதிய கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள மும்முரமாக முயன்று கொண்டிருக்கும் வேளையில் மகாதிர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
ஜாஹிட் அம்னோவுக்கு எதிரணியில் இருப்பது பிடிக்கவில்லை என்பதை எடுத்துரைப்பதற்காக அண்மையில் ஒரு குழுவுடன் சென்று மகாதிரைச் சந்தித்திருக்கிறார். இது அவரே ஒப்புக்கொண்ட ஒரு விசயம்.
எப்படியாவது ஏதாவது ஒரு கட்சியுடன் இணைந்து “ஒற்றுமை அரசாங்கம்” அமைப்பதுதான் அம்னோவின் குறிக்கோள் என்றும் ஜாஹிட் கூறியுள்ளார்.