போலிஸ் அருள் கந்தாவை 5 மணி நேரம் விசாரித்தது

எம்டிபி-யின் முன்னாள் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, அருள் கந்தா கந்தசாமியை, 1எம்டிபி தொடர்பான சாட்சியத்தைப் பெற, போலிசார் நேற்று அவரை அழைத்ததாக நம்பப்படுகிறது.

1எம்டிபி விசாரணையில் நெருங்கிய தொடர்புடைய ஒருவர், கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற ‘செராமா’-க்களில் பேசிய தனிநபர்களில், விசாரணைக்கு அழைக்கப்பட்ட சிலரில் அருள் கந்தாவும் ஒருவர் என்றார்.

“அருள் 1எம்டிபி பற்றி ஒருசில ‘செராமா’க்களில் பேசியுள்ளார்.

“அவருடைய உரையில், அவர் குறிப்பிட்டுள்ள 1எம்டிபி பற்றிய உண்மைகளைப் போலிஸ் ஆய்வு செய்துவருகிறது,” எனத் தெரிவித்தார்.

நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டின் கீழ், விரைவில் அருள் கைது செய்யப்படலாம், ஆனால் அது விசாரணையின் முன்னேற்றத்தைப் பொறுத்தது, என்றும் அந்த ஆதாரம் கூறியுள்ளது.

புக்கிட் அமான், வர்த்தகக் குற்ற விசாரணை புலனாய்வு துறை இயக்குநர் அமர் சிங் இஷார் சிங், மலேசியாகினி தொடர்புகொண்டபோது, அருள் கந்தா மீதான விசாரணையை உறுதிபடுத்தினார்.

மே 9, பொதுத் தேர்தலுக்கு முன்னர், 1எம்டிபி பற்றி “தவறான தகவல்”களை எதிர்க்கட்சியினர் பரப்புவதாகக் கூறி, அக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், நாடு முழுவதும் நடந்த ‘செராமா’க்களில் அருள் பேசினார்.

ஆனால், தேர்தலுக்குப் பின்னர் நிதியமைச்சு அவரையும் இன்னும் சில அதிகாரிகளையும் அழைத்து விளக்கம் கேட்டபோது, 1எம்டிபி முதலீட்டின் மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் (RM9.8 பில்லியன்) என்பது உண்மையா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

கடந்த ஜூன் 30-ம் தேதி, ஒப்பந்தம் முடிவடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே, அருள் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.